Skip to main content

“முதலில் அவர் பயிற்சி அளிக்க ஒப்புக்கொள்ளவில்லை” - அனுபவம் பகிர்ந்த பவன் கல்யாண்

Published on 25/03/2025 | Edited on 25/03/2025
pawan kalyan about shihan hussaini

கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.
 
இந்த சூழலில் சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். இது குறித்தும் வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தலின்படி ஷிஹான் ஹுசைனிக்கு மருத்துவச் சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

உடல்நிலை தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் அவர் பேசியது பலரை கலங்கடிக்கச் செய்தது. ரத்த புற்றுநோயால் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். ஆனால் தனது இதயத்தை என் வில்வித்தை, கராத்தே மாணவர்களிடம் பாதுகாப்பதற்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் 22 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உடல் அஞ்சலிக்காக பெசன்ட் நகரில் உள்ள  வில்வித்தை சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஷிஹான் ஹுசைனியிடம் மாணவராக பயிற்சி பெற்ற நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கையில், “ஷிகான் ஹுசைனியிடம் நான் கராத்தே பயிற்சி பெற்றேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது. சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டியிருந்தால், அதற்கு நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வேன் என்று கூறினேன். இந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை சென்று ஹுசைனியைப் பார்க்க முடிவு செய்திருந்தேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. 

சென்னையில், ஹுசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100% பின்பற்றுவேன். முதலில், அவர் கராத்தே கற்றுக் கொடுக்க ஒத்துக்கவில்லை. ‘நான் தற்பொழுது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது’ என்று அவர் கூறினார். ஆனால், தொடர்ந்து நான் அவரை பலமுறை கேட்ட பிறகு அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி, கராத்தேவில் ‘பிளாக் பெல்ட்’ பெற பயிற்சி பெற்றேன். அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும், தம்முடு படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க பெரிதாக உதவியது.

ஹுசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் மூவாயிரம் பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டைப் பிரபலப்படுத்த ஹுசைனி பாடுபட்டார். அவர் THE ARCHERY ASSOCIATION OF TAMIL NADU (TAAT)ல் முக்கியமான பொறுப்புகளை வகித்தார். ஹுசைனியின் திறமைகள் தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முகத் திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்தார். அவர் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினார். சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்தச் செல்லும்போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்வார். பன்முகத் திறமை கொண்ட ஹுசைனி, இளைஞர்களுக்கு தற்காப்புக் கலைகளை இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்ய விரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது. ஹுசைனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்