Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; முதலமைச்சரின் மனைவியை ஏமாற்றிய நபர்! பகுதி  13

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Digital cheating part 13

 

ஆந்திரா க்ரைம் யூனிட் ஒன்று மோசடி வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவுக்கு புறப்பட்டது. ஜார்கண்டின் தலைநகரமான ராஞ்சி இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். மாநிலத்தின் தலைநகர் இரயில் நிலையத்தில் நம் திருச்சி ஜங்ஷனின் பாதி அளவுக்கே வசதிகள் இருந்தன.

 

ராஞ்சியிலிருந்து ஜம்தாராவுக்கு காரில் செல்ல முடிவெடுத்த  அவர்கள், வாடகை டாக்ஸி ஒன்றை விசாரித்துள்ளனர். அந்த டாக்ஸி டிரைவரோ, ‘அவ்வளவு தூரம் வர முடியாது’ என்றுள்ளார். இத்தனைக்கும் ராஞ்சியில் இருந்து ஜம்தாராவிற்கு வெறும் 213 கி.மீ தூரம் தான். காரணத்தை விசாரித்தபோது, ‘கார் பயணம் சேஃப் கிடையாது. போவதற்கு மட்டும் 10 மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும்’ என்றுள்ளார்கள் அங்கிருந்த கார் டிரைவர்கள். ‘ரயிலில் செல்லுங்கள் அதுதான் வசதி, 6 மணி நேரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்’ என்றுள்ளார்கள். 

 

ராஞ்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் ஜம்தாரா செல்லும் எனச் சொன்னதால் ராஞ்சியிலிருந்து ஜம்தாராவுக்கு ரயில் ஏறியுள்ளனர். ஜம்தாராவில் உள்ள சித்தரஞ்சன் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியபோது கிராமத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அளவுக்கே இருந்தது. ஜம்தாரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து தங்களிடமுள்ள எப்.ஐ.ஆர், கோர்ட் ஆர்டர் காப்பிகளை தந்ததும் அவர், ஏ.எஸ்.பியிடம் அனுப்பியுள்ளார். அவர் ஜம்தாரா சைபர்செல் காவல்நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டு பேசிவிட்டு, ‘குற்றவாளிகளை அடையாளப்படுத்தி கைது செய்ய எல்லா உதவிகளையும் செய்யுங்க’ எனச் சொல்லியுள்ளார். காவல்நிலையத்துக்கு சென்று, ஆந்திரா போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டதும் அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த உ.பி போலீஸார், ‘மதராஸியா’ எனக் கேட்டு சிரித்துள்ளனர். 

 

மேற்குவங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநில க்ரைம் போலீஸாரும் அங்கே அமர்ந்துகொண்டு ஆளுக்கொரு கட்டை டேபிள் மீது வைத்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டு இருந்தனர். ஜம்தாரா காவல்நிலைய எஸ்.ஐ., ஆந்திரா போலீஸாரை வரவேற்று, அவர்களிடமிருந்த லட்டரை வாங்கி பிரித்து பார்த்துவிட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் இருந்து ஒரு கட்டை எடுத்து அவர்கள் முன்வைத்தார். ‘நீங்க கொண்டு வந்திருக்கற ஃபோட்டோ இதுல இருக்கான்னு பாருங்க; பெயர் பார்த்தாலாம் தெரியாது. அவுங்க பல பெயர்கள்ல இருப்பாங்க. ஃபோட்டோ பார்த்து அடையாளம் கண்டுபிடிங்க’ என்றுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் ஃபோட்டோ ஒட்டிய நோட்டீஸ்கள் அதில் இருந்துள்ளன. ஒவ்வொன்றாக கவனமாக பார்க்கத் துவங்கினர். இரண்டு மணி நேரத் தேடலுக்கு பின்னர் தங்களிடமிருந்த ஒரு ஃபோட்டோவும், அந்த பேப்பரில் இருந்த ஒரு ஃபோட்டோவும் ஒத்துப் போனது. அதை அந்த எஸ்.ஐயிடம் சுட்டிக்காட்டினர். அதனை வாங்கி ஒப்பிட்டுப் பார்த்தவர், அருகில் இருந்த ஏட்டுவிடம் அவனின் முகவரியை கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கச் சொல்லியுள்ளார். 

 

‘எங்கக் கிட்டயே அட்ரஸ் இருக்கு; ஆனா அது அவன் அட்ரஸ்சா இருக்காது’ என்றுள்ளார் ரைட்டர். பின்னர் அந்த எஸ்.ஐ., பிரிண்டரில் இருந்து ஒரு பேப்பரை தந்து இதுதான் அவனின் ஒரிஜினல் அட்ரஸ் என்றுள்ளார். மேலும் ஆந்திரா போலிஸாரிடம், “இப்போ அந்த ஊருக்கு போக முடியாது. ஈவ்னிங் ஆயிடுச்சி, நைட் ரூம் எடுத்து தங்குங்க காலையில் போகலாம். லாட்ஜ்ல அதர் ஸ்டேட் போலிஸ்ன்னு சொன்னா அலார்ட்டாகிடுவாங்க, அவுங்க ஆளுங்க எல்லா இடத்தலயும் இருப்பாங்க. அதனால் டூர் வந்திருக்கறதா சொல்லி ரூம் எடுங்க” எனச் சொல்லியுள்ளார் ரைட்டர். அதன்படியே இவர்களும் ஒரு லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து இரவு தங்கினர். 

 

மறுநாள் ஜம்தாரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அந்த கிராமத்துக்கு போலீஸ் ஜீப்பில் புறப்பட்டுள்ளார்கள். “காட்டுவழிப் பயணம் வழியில் யானைகள் க்ராஸ் ஆகும், புலி நடமாட்டம் இருக்கும் பயப்படாம இருங்க. அதுங்க க்ராஸ் செய்யும்போது சத்தம் போட்டுடாதிங்க” எனச்சொல்ல இவர்கள் அடக்கமாக இருந்துள்ளார்கள். “இதெல்லாம் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதி” என மிஷின் கன் வைத்திருந்த போலிஸ்காரர் ஒருவர் சொல்லியுள்ளார். கொஞ்ச தூரம் ஓரளவு நல்ல சாலையில் பயணமானவர்கள் அதற்கடுத்து கரடுமுரடான சாலைகளில் பயணமாகினர். திரும்பிய பக்கமெல்லாம் மரம், அடர்ந்த காடு, திடீரென கொஞ்ச தூரத்துக்கு விவசாய நிலங்கள் கண்ணில் பட்டுள்ளன. மலைகளில் தேயிலை தோட்டம் வைத்திருந்துள்ளனர். அந்த கிராமத்துக்குள் நுழைந்தபோது ஆந்திரா போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள வீடுகளை ஆச்சர்யமாகப் பார்த்தனர். பல வீடுகள் தகரம் போட்ட மண் சுவர் வீடுகளாக இருந்துள்ளன. சில வீடுகள் சில கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட பங்களாவாக இருந்தது. பல வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டும் இருந்துள்ளன. அந்த வீட்டில் வசித்த ஆட்களோ பஞ்சம் வந்த காலத்தில் இருந்த உடல்வாகில் இருந்தனர். கிராமத்தின் இரண்டு இடத்தில் ‘இங்கு ஆங்கிலம் கற்று தரப்படும்’ என சுண்ணாம்பால் சுவற்றில் எழுதி வைத்திருந்தனர். 

 

அந்த கிராமத்தின் தலைவரை சந்தித்து பேசியுள்ளனர். அவர், “எங்க ஆளுங்க அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க” எனச் சொல்ல, “அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவனை வரச் சொல்லுங்க” என்றுள்ளனர் ஜம்தாரா போலீஸார். “அவன் குடும்பத்தோட வேலை செய்ய கல்கத்தா போயிருக்கான். எப்போ வருவாங்கன்னு தெரியாது” எனச் சொல்ல ஆந்திரா போலீஸ் நொந்து போயுள்ளனர். திரும்பி வரும்போது, “இந்த ஊர்க்காரங்களை பார்த்தா டெக்னாலஜி தெரிஞ்சவங்க மாதிரி தெரியலயே. இவுங்களா இவ்ளோ மோசடி செய்யறது” எனக் கேட்க அந்த எஸ்.ஐ சிரித்துள்ளார். “என்னடா படிச்சிருக்கிங்கன்னு கேட்டால், எட்டாவது இல்லன்னா ஒன்பதாவதுன்னு சொல்வானுங்க. அது உண்மைதான். ஆனால் இவனுங்கதான் டிஜிட்டல் வழி மோசடி செய்யறதல நம்பர் ஒன்” என்றுள்ளார். “இவுங்க மோசடிகளை ஏன் தடுக்காம இருக்கிங்க?” என ஆந்திரா போலீஸ் கேட்க, “இந்த பகுதிகள் ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் இந்த பகுதி மீது எந்த கவர்மெண்ட்டும் அக்கறைப் படல. அரசுக்கு இணையா மாவோயிஸ்ட்கள் பழங்குடியின மக்கள் மத்தியில் இணை அரசாங்கமே நடத்தனாங்க. 

 

அதனால்தான் இந்த பகுதியில் காவல் நிலையங்கள் இருக்காது. காவல் நிலையங்கள் இருந்தால் மாவோயிஸ்ட்கள் தாக்கி அழிச்சிடுவாங்க. பழங்குடியின மக்களும் பழமை மாறாதவங்க. தங்கள் வாழ்க்கையை முன்னேற்ற அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கல, இவுங்க வாழ்வாதரத்துக்காக திருட தொடங்குனாங்க. திருடிட்டு இவுங்க ஊருக்கு வந்துடுவாங்க, உள்ளுர் போலீசே கூட இந்த பகுதிகளுக்கு வர முடியாது. அது இவுங்களுக்கு சௌகரியமா போச்சு. அதோட, கஞ்சா பயிர் செய்து ரயில்கள் வழியா இந்தியா முழுமைக்கும் கடத்தனாங்க. எங்க ஜம்தாராவை சுற்றி நிறைய ரயில் நிலையங்கள் உள்ளன. அவையெல்லாம் ஜங்சன்கள். இங்கிருந்து டெல்லிக்கு, ஹவுரா (கொல்கத்தா) ராஜஸ்தான், பம்பாய், நாக்பூர், மதராஸிக்குயெல்லாம் நேரடி ரயில்கள் இருக்கு. ரயில்களில் ஏறி பயணிகளை அடித்து, மிரட்டி கொள்ளையடிச்சிட்டு, மலைப்பகுதியில் ரயில் சுலோவா போகும்போதே இறங்கி தப்பிச்சி போய்டுவாங்க. இல்லன்னா செயின் இழுத்து ரயிலை நிறுத்திட்டு காட்டுக்குள்ள போய் பதுங்கிடுவாங்க. இதைத்தான் பல ஆண்டுகளாக செய்துக்கிட்டு இருந்தாங்க. 

 

ஜம்தாரா, கர்மத்தாரா, நளா ரயில்வே போலிஸ்கிட்ட பல புகார்கள் வந்துக்கிட்டு இருந்தது. லாரிகளை மடக்கி கொள்ளையடிக்கறதா ஜம்தாரா போலிஸ்கிட்ட வந்தது. இப்போ அதுவெல்லாம் குறைஞ்சிடுச்சி, இப்போ வர்றதெல்லாம் ஆன்லைன் மோசடி புகார்கள் தான். இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் இவுங்க மேல எப்.ஐ.ஆர் போட்டு எங்களுக்கு அனுப்பிக்கிட்டே இருக்காங்க. உங்கள மாதிரி இதுவரை 15 ஸ்டேட் போலீஸ் இங்க வந்து பலரையும் கைது செய்தும் போயிருக்காங்க. போலீஸ், வழக்கு, அரஸ்ட், ஜெயிலுக்கு அவுங்க கவலைப்படறதில்லை. லட்சங்களை கட்டி உடனே ஜாமீன்ல வந்துடுவாங்க. இந்த கிராமங்களில் உள்ள மக்களைப் பொருத்தவரை எவ்வளவு மோசடி செய்து சம்பாதிக்கறயோ அந்தளவுக்கு கிராம மக்கள்கிட்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அவுங்கள அப்படியே கொண்டாடுவாங்க. சினிமாவில் தான் ஹீரோங்க சூப்பர் ஸ்டார், ராக் ஸ்டார்ன்னு பட்டம் வச்சிக்குவாங்க. இங்க மோசடியில் யார் டாப், யாரை ஏமாத்தினாங்க அப்படிங்கறதை வச்சி சக கூட்டாளிங்க சூப்பர் ஸ்டார், ராக் ஸ்டார்ங்கற பட்டம் குடுப்பாங்க” என்றார் விளக்கமாக.

 

“என்ன சார் சொல்றீங்க” என அதிர்ச்சியானார் அந்த ஆந்திரா எஸ்.ஐ.

 

ஒரு முதலமைச்சரோட மனைவியிடம் ஃபோன்ல பேசியே பல லட்சம் களவாடிட்டான்; அவன்தான் இப்போ இந்த மக்களின் ராக் ஸ்டார். யார் அவன்? ராக் ஸ்டாரானது எப்படி?

 

வேட்டை தொடரும்

 

 

Next Story

'அந்த ஏழு பேரின் நோக்கமும் என்னை...'- உதற வைக்கும் ஜார்கண்ட் சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

ஸ்பெயினை சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு பலவந்தமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், சாகச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதும் அண்மையாவே அதிகரித்து வரும் நிலையில், பிரேசிலை சேர்ந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். தாங்கள் மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்கள் தொடர்பான விவரங்களையும், தங்களுடைய சாதனைகளையும் அவ்வப்போது அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

இதுவரை இத்தாலி, ஈரான் என பல நாடுகளுக்கு சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்த இவர்கள் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள், லடாக், காஷ்மீர், ஹிமாச்சல்பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாத் தலங்களை பார்த்ததோடு, இந்தியாவில் தாங்கள் மேற்கொண்ட சாகச பயணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், வெளிநாட்டவர் இருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில் குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு அந்த ஸ்பெயின் தம்பதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எங்களுக்கு நடந்ததுபோல் யாருக்கும் நடக்க கூடாது. ஏழு பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். எங்களை அடித்து துன்புறுத்தியதோடு எங்களிடமிருந்த உடைமைகளை கொள்ளையடித்தனர். அவர்களின் நோக்கம் எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவே இருந்தது. இந்த சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது' என உலக மக்களுக்கு பேரறிவிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Next Story

பாஜகவின் குதிரை பேரம்; பறந்த ஜார்க்கண்ட் எம்.எல்ஏக்கள்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
BJP's Horse Bargain; Jharkhand MLAs who flew to Hyderabad

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வரும் சம்பாய் சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக குதிரை பேரம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.