குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
2010ஆம் ஆண்டு தான் சந்தித்த தங்க நாயகி என்ற பெண்ணுடைய வழக்கைப் பற்றி பார்க்கப்போகிறோம். வட சென்னையைச் சேர்ந்த அருணோதயம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்க நாயகியை என்னிடம் அனுப்பி வைத்தனர். அப்போது நான் தங்க நாயகியிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தபோது, எளிய குடும்பத்தைச் சேர்ந்த தங்க நாயகிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்கு போகாமல் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்துள்ளார். குழந்தைகளை தன்னுடைய உழைப்பினால் படிக்க வைத்துக்கொண்டிருந்த தங்க நாயகியை அவளது கணவர் திடீரென ஒரு நாள் விட்டுச் செல்கிறார். அவர் குடும்பத்தைவிட்டுப் போகும்போது மூத்த மகன் 5ஆம் வகுப்பு படித்திருக்கிறார். அதன் பிறகு அருணோதயம் அமைப்பு அந்த குழந்தையைத் தத்தெடுத்து படிக்க வைத்துள்ளனர்.
என்னிடம் இந்த வழக்கு வந்தபோது, அந்த குழந்தை பெரியவனாகி கல்லூரியில் படித்து வந்தார். அவருடைய அம்மா என்னிடம் தாங்கள் திண்டி வனம் அருகில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்தோம். கணவருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. மகனின் படிப்புக்கும் மகளின் திருமணத்திற்கும் பணம் இல்லை என்றும் கணவர் குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும் புலம்பினார். அதன் பின்பு நான் கணவர் என்ன செய்கிறார் என்ற கேட்டபோது வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துகொண்டு அந்த பெண்ணிடம் குடித்தனம் செய்து வருகிறார் என்றார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கலாமே என்று அந்த அம்மாவிடம் கேட்டதற்கு, அங்கு சென்றால் எங்கேயாவது உன் கணவர் இருப்பார் என்று அலட்சியமாகப் பேசுகின்றனர் என்றார்.
அதன் பிறகு நான் அந்த அம்மாவிடம் கணவர் இருக்கும் முகவரியைத் தேடிக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லிவிட்டு, முகவரி தெரிந்ததும் குற்றவியல் சட்டத்தில் 125வது பிரிவில் வழக்குப் பதிவு செய்தோம். எதற்காக இந்த பிரிவில் வழக்கு தொடர்ந்தேன் என்றால் நான் அந்த அம்மாவின் வழக்கை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்ளும்போது மெயிண்டனன்ஸ் வழக்கு வந்தால் 6 மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தீர்வு கிடைத்திருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பு வந்திருந்தது. அதனால்தான் குற்றவியல் சட்டம் 125வது பிரிவில் அந்த அம்மாவுக்கும் இரு குழந்தைகளுக்கும் மெயிண்டனஸ் கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த சட்டத்தின் அடிப்படை அப்போது உயர்ந்த பட்சமாக ஒரு ஆளுக்கு ரூ.500 தான் மெயிண்டனஸ் பணம் கொடுக்க முடியும்.
இதையடுத்து அந்த கணவரின் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி என்னுடைய ஜூனியர் வழக்கறிஞர்களுடன் அனுப்பிவைத்தேன். வழக்குப் பதிவு தொடர்ந்த பிறகு அதில் ஒரு ஜெராக்ஸ் காப்பியை எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு காவலர்கள் வழக்கு தொடர்பாக விசாரிக்கிறார்களா? என்று காத்திருந்தோம். ஆனால் காவலர்கள் பெரிதாக விசாரணையில் முனைப்பில்லாமல் இருந்தனர். பின்பு நான் அந்த ஜெராக்ஸ் காப்பியை வைத்து விரைவில் காவல் துறையினர் விசாரணை நடந்த கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். மனுவௌ விசாரித்த நீதிபதி வழக்கை விசாரிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அந்த அம்மாவின் கணவரை தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
நான் அந்த அம்மாவின் கணவரிடம் ஒழுக்கமாக நீதிமன்றம் வந்து வழக்கு தொடர்பாக ஆஜராகு இல்லையென்றால் தொடர்பில் இருக்கும் வேறொரு மனைவி குறித்து காவல் துறையினரிடம் வழக்குப் பதிவு தொடர வேண்டியிருக்கும் என பக்குவமாக எடுத்துக் கூறினேன். நான் சொன்னதிற்கு பிறகு அவர் சில நாட்கள் நீதிமன்றம் வந்துகொண்டிருந்தார். பின்பு வீட்டை காலி செய்துவிட்டு ஓடிவிட்டார். இதை நீதிபதிகளிடம் கூறிய பிறகு சாதகமாக ஒருதலைபட்ச தீர்ப்பு வந்து அந்த அம்மாவின் கணவர் மெயிண்டனஸ் பணம் தரக் கோரி உத்தரவிட்டார். குற்றவியல் சட்டம் 25வது பிரிவில் வழக்கு தொடரும்போது கைது மற்றும் சொத்தில் அட்டாச்மெண்ட் கேட்டு வழக்கு தொடரலாம். இந்த விஷயத்தை அந்த கணவருக்கு தெரிந்த பிறகு மீண்டும் ஓடிவந்து தன்னுடைய குடும்பத்திற்கு மெயிண்டனன்ஸ் தொகையைக் கொடுத்து வந்தார். வழக்கும் நல்லபடியாக முடிந்தது.
Published on 03/01/2025 | Edited on 03/01/2025