Skip to main content

உலகின் அசைக்க முடியாத பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்...?

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

உண்மையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இந்தியாவிலிருந்து உருவாவதை பார்க்கும் பாக்கியம் படைத்தவர்கள். கவாஸ்கர், சச்சின் என இருந்த பட்டியலில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார். விராத் கோலி ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

 

kk

 

 

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோலியை பாராட்டி வருகின்றனர். ஆனால் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், மற்ற நாட்டு வீரர்களை அதிகம் பாராட்டாத ஆஸ்திரேலிய வீரர்கள் கூட விராட் கோலிதான் பெஸ்ட் பேட்ஸ்மேன் என ஒரு மனதாகக் கூறியுள்ளனர்.  ஐ.பி.ல். போட்டிகளை மனதில் வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள், கோலியை பாராட்டுகின்றனர் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் ஐ.பி.ல்.-ல் எந்த விதத்திலும் பங்கேற்காத ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் கூடக் கோலியை பாராட்டுவதை புறம் தள்ளிவிட முடியாது.

 

சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 7 கிரிக்கெட் சேனல் யார் இன்றைய உலகில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வியை ஆஸ்திரேலிய வீரர்களிடம் முன்வைத்தது. அதற்கு ரிக்கி பாண்டிங், விராட் கோலிதான் பெஸ்ட் என எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தார். "இப்போது உலகில் சிறந்த வீரர், என் கருத்துப்படி, விராட் கோலி. மூன்று வடிவங்களிலும் அனைத்து விதமான திறன்களையும் அவர் வெளிபடுத்துகிறார்." என்று ரிக்கி பாண்டிங் கூறினார். மேலும், முன்னாள் தொடக்க மற்றும் தற்போதைய ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், பிராட் ஹாட்ஜ், ஆண்டி மேஹர், டிம் பெயின், ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் மெக் லானிங், எலிஸ் வில்லானி ஆகியோரும் இதே கருத்தைத் தெரிவித்தனர். ஆனால் ஒரே ஒரு வீரர் மட்டுமே மாற்று கருத்தைத் தெரிவித்தார். ஸ்டீவ் ஸ்மித் இல்லாத நிலையில் மட்டுமே, விராட் சிறந்தவர் என்று முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ப்ரேஷே கூறினார்.

 

 

kk

 

 

தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் மிக அருமையான கட்டத்தில் கோலி உள்ளாரெனச் சொல்லலாம். 2018-ல் 14 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1202 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 160*. இதில் ஆச்சரியம் தரும் புள்ளிவிவரம் எதுவென்றால், அவருடைய பேட்டிங் சராசரி. இந்த வருடத்தின் ஒரு நாள் போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி 134.  10 டெஸ்ட் போட்டிகளில் இந்த வருடம் பங்கேற்றுள்ள கோலி 59 சராசரியுடன் 1063 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 153. 20 ஓவர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். 2018 ஐ.பி.ல்.-ல் 14 ஆட்டங்களில்  530 ரன்களை 48 பேட்டிங் சராசரியுடன் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 92*.

 

இன்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாகக் கருதப்படுபவர்கள் கோலி, ஷர்மா, ஸ்மித், வில்லியம்சன், ரூட், வார்னர். இவர்களில் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரூட், வார்னர் ஆகியோர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர். ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசைப்  பட்டியலில் கோலி முதல் இடத்தையும், ஷர்மா  இரண்டாம் இடத்தையும், ரூட் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

 

ஒரு பார்மேட்டில் சிறப்பாக விளையாடும் சில வீரர்கள், மற்ற பார்மேட்டில் சிறப்பாக விளையாட முடிவதில்லை. ஆனால் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து பார்மேட்களிலும் மிகசிறந்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார் கோலி. ஒரு காலத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சாதாரண பேட்ஸ்மேனாகவே இருந்தார் கோலி. பின் தன்னுடைய ஆட்ட நுணுக்கங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி, இன்று அவருக்கு நிகர் யாரும் இல்லை என்ற அளவுக்கு முன்னேறியுள்ளார்.