Skip to main content

துரதிருஷ்டவசமாக சதத்தை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் - வலுவான நிலையில் இந்தியா!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

washington sundar

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதற்குப் பிறகு, ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் ரோகித், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் முன்னிலை பெற்றது. முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டிய ரிஷப் பந்த் சதமடித்து (101 ரன்கள்) ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 60 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 294 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றிருந்தது.

 

இந்தநிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (06 மார்ச்) தொடங்கியது. வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஜோடி சிறப்பாக ஆடி 106 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அக்ஸர் படேல் 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த இஷாந்த் சர்மாவும், சிராஜூம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் இன்னிங்ஸ் 365 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இதனால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் அதனைத் தவறவிட்டார். 96 ரன்களில் அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

 

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

Next Story

நரேந்திர மோடி மைதானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல்; போலீஸார் தீவிர விசாரணை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Threatening to blow up Narendra Modi stadium in ahmedabad

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

அந்த வகையில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானத்தில் இந்தத் தொடர்கள் நடைபெறவுள்ளன. அதில், முதல் ஆட்டமான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின. அதேபோல், போட்டிக்கான கடைசி ஆட்டமும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியையும், நரேந்திர மோடி மைதானத்தையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் மூலம் மும்பை காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் (05-10-23) இரவு மும்பை காவல்துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.

 

அந்தக் கடிதத்தில், ‘டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயை விடுக்கவிக்க வேண்டும். அதோடு சேர்த்து ரூ. 500 கோடி பணமும் தர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வெடி வைத்து தகர்த்து விடுவோம். இந்த தாக்குதலை நடத்துவதற்காக ஆட்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலின் அனுப்புநர் யார் என்ற கோணத்தில் மின்னஞ்சலின் முகவரியைத் தீவிரமாகக் கண்காணித்தும், விசாரித்தும் வருகின்றனர். 

 

 

Next Story

ஐ.பி.எல் இறுதி போட்டியில் அமீர்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

aamir khan lal singh chaddha movie trailer release IPL final

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ஐ.பி.எல் இறுதி போட்டியில் வெளியிடப்படவுள்ளது. ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர் வெளியிடப்படவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக  ஒளிபரப்புகிறது. உலக வரலாற்றிலேயே இதுவரை எந்த படத்தின் ட்ரைலரும்  இது போன்ற கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் வெளியாகாத நிலையில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனால் அமீர்கானின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளன.