Skip to main content

எங்கள் விளையாட்டையும் பார்க்க வாருங்கள்! - சுனில் ஷேத்ரி உருக்கமான வேண்டுகோள்

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

உலககோப்பை கால்பந்தாட்டப் போட்டி தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. உலகின் தலைசிறந்த பல அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றன. இந்திய அளவிலும் கணிசமான ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், அதே சமயம் இந்திய கால்பந்தாட்ட அணி ஒருபுறம் மிகச்சிறப்பாக ஆடியும் யாரும் அதன் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை. 
 

Sunil

 

இந்தியா, சீனா உள்ளிட்ட நான்கு அணிகள் கலந்துகொள்ளும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை கால்பந்தாட்ட மைதானத்தில் சீன அணியை எதிர்கொண்டது இந்திய கால்பந்தாட்ட அணி. அந்தப் போட்டியில் இந்திய அணி 5  - 0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி சர்வதேச அளவில் தனது மூன்றாவது ஹாட்ரிக் கோல் சாதனையைப் பதிவு செய்தார். ஆனால், இந்த வெற்றியையும், சாதனையையும் கொண்டாட அன்றைய மைதானத்தில் யாருமே இல்லை.
 

இந்நிலையில், கென்யா மற்றும் இந்திய அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டி நாளை மும்பையில் வைத்து நடைபெறவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரிக்கு இது நூறாவது சர்வதேச போட்டி ஆகும். இந்தியாவின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான சுனில் ஷேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகின் தலைசிறந்த அணிகள், கிளப்புகளைக் கொண்டாடும் இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களே.. எங்கள் விளையாட்டையும் கொஞ்சம் பார்க்க வாருங்கள். எங்களிடம் குறை இருக்கலாம். நாங்கள் அவர்களோடு ஒப்பிடும் அளவுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், ஒருநாள் எல்லாமே மாறும். மாற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவுங்கள். மைதானத்திற்கு வாருங்கள். எங்கள் விளையாட்டைப் பாருங்கள். எங்களை விமர்சியுங்கள், எங்களை நோக்கி கத்துங்கள், திட்டுங்கள், எங்கள் குறைகளைப் பற்றி விவாதியுங்கள். நீங்கள் நினைத்தால் மிகப்பெரிய மாற்றம் பிறக்க வாய்ப்பிருக்கிறது’ என இருகரம் கூப்பி உருக்கமாக வேண்டிக்கொண்டார். இந்திய கால்ப்பந்தாட்ட அணி உலக அளவில் 97ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.