
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி ஈரோட்டில் உள்ள நூற்பாலையில் வேலைபார்த்து வருகின்றனர். இந்த தம்பதியின் 15 வயது மகள் தனது தாய் தந்தையருடன் அவ்வப்போது நூற்பாலைக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று இந்த நூற்பாலையில் நேபாளம் நாட்டை சேர்ந்த பிலால் என்பவர் மகன் உபேந்தர்(22) என்பவர் மகனும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அசாம் தம்பதியின் 15 வயது சிறுமி நூற்பாலைக்கு வரும்போது உபேந்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி கொண்ட உபேந்தர், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கருங்கல்பாளையம் போலீசார் சிறுமி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை உபேந்தர் இமாச்சல பிரதேசத்திற்குக் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இமாச்சல பிரதேசத்திற்கு விரைந்த போலீசார் உபேந்தரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் உபேந்தரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.