
100 நாள் வேலைத் திட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தங்கை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சில , 2024-2025 வரை எந்த வேலையும் செய்யாமல் தங்கள் வங்கிக் கணக்குகளில் ஊதியத்தை பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட அளவிலான விசாரணையை அதிகாரிகள் தொடங்கினர்.
அந்த விசாரணையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமியின் சகோதரி மற்றும் அவரது உறவினர்கள் உட்பல பலர் மோசடி செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த மோசடியில், முகமது ஷமியின் சகோதரி ஷபினா, ஷபினாவின் கணவர் கஸ்னவி, அவரது மைத்துனர்கள் ஆமிர் சுஹைல், நஸ்ருதீன் மற்றும் ஷேகு உள்ளிட்ட 18 பேர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஷபினாவின் மாமியார் குலே ஆயிஷா மூலம், இந்த மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடிகள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும், இடைநீக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.