இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நாக்பூரில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும் ஆஸிஸ் தொடர் போன்று, சமீப காலங்களில் அதிக கவனம் பெற்று வரும் டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை. 2023 ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை நாக்பூரில் துவங்குகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பாதிக்குமேல் கோலி மற்றும் புஜாராவை நம்பியுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு நம்பிக்கை மற்றும் பலத்தைக் கொடுக்கும்.
உலகக்கோப்பைக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமெனில் அணியின் சுழல் பிரிவு மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியம். நாக்பூர் ஆடுகளமும் சுழலுக்கு கை கொடுக்கும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தற்போது இந்தியாவில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் என நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதே போல் ஆஸ்திரேலிய அணியிலும் நாதன் லயன், ஸ்வெப்சன், ஆஸ்டன் என சுழல் ஜாம்பவான்கள் இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்தக் காத்திருக்கின்றனர்.
இரு அணிகளுக்கு இடையே அதிக விக்கெட்கள் பட்டியலில் சுழல்பந்து வீச்சாளர்களே முதல் நான்கு இடங்களில் உள்ளனர். கும்ப்ளே 11 விக்கெட்களுடன் முதல் இடத்திலும் ஹர்பஜன் சிங் 95 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும் லயன் 94 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் அஷ்வின் 89 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டிங் மிக முக்கியம். இந்த தொடரில் ஸ்லிப் கேட்ச்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். அதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கமாக நின்று கேட்ச் செய்வது, ஸ்லிப் பகுதிகளில் கேட்ச் செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல், “அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களும் உயர்தர வீரர்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் போட்டி நாளில் வெற்றி தேடிக் கொடுப்பவராக மாறலாம். குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிக்கு எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டே அந்த போட்டிக்கான வீரர்கள் தேர்வு இருக்கும்.” என்றார்.
மறுபுறம் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து காயம் காரணமாக வீரர்கள் விலகிய வண்ணம் உள்ளனர். அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் ஹேசில்வுடிற்கு தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராத காரணத்தால் இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போது பந்து தாக்கி அவரது வலது ஆட்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டிகளில் விளையாடாத நிலையில் ஹேசில்வுட் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
போட்டி நாளை காலை 9.30 மணியளவில் துவங்கும்.
இரு அணிகளிலும் இடம் பெற்ற வீரர்கள் விபரம், “ இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் , சூர்யகுமார் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட், டாட் மர்பி, மிட்செல் ஸ்வெப்சன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க் , மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன், லான்ஸ் மோரிஸ்