உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அனுபவ வீரர் ஸ்மித்துடன் இணைந்த இளம் வீரர் ஜாஸ் இங்லிஷ் இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் பதம் பார்த்த அவர், அபாரமாக ஆடி 47 பந்துகளில் சதத்தைக் கடந்து இன்டர்நேஷனல் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடி 110 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் பிஷ்னாய் ஒரு விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களை விரைவிலேயே இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய இஷானும் சூரியகுமாரும் ஆஸ்திரேலியா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அதிரடியாக ஆடிய இஷான் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த திலக் வர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் இணை எளிதில் இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் என நினைத்த வேளையில், சிறப்பாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த அக்ஸர் படேல் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த பவுலர்கள் அடுத்தடுத்த பந்துகளில் ரன் அவுட்டாக கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் இமாலய சிக்சர் அடித்தார். ஆனால் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்த அந்த பந்து நோபாலாக ஆனதால், இந்திய அணிக்கு தேவையான வெற்றிக்கான ஒரு ரன் கிடைத்து விட்டதால், 19.5 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசிப் பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சி பெற செய்தாலும், அந்த சிக்சர் அணியின் ரன்களில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது சற்று ஏமாற்றம் அளித்தது. ஆஸி தரப்பில் சங்கா 2 விக்கெட்டுகளும், அப்பாட், ஷார்ட், பெஹ்ரெண்டார்ஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. சிறப்பாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் 208 ரன்களை சேஸ் செய்ததன் மூலம், இந்தியாவில் விளையாடிய டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
- வெ.அருண்குமார்