இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரில் வெற்றிபெற்றது. தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொதப்ப, ஆட்டத்தின் போக்கு ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியது.
இந்திய அணியின் சார்பில் 6ஆவது நபராக களமிறங்கிய தோனி, 23 ஓவர்களில் 182 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நெருக்கடியான சூழலின் களமிறங்கினார். 59 பந்துகளைச் சந்தித்து 37 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். போட்டியின் முக்கியமான தருணத்தில் தோனியின் நிதான ஆட்டம் பலரை வெறுப்பேற்ற, அந்த இன்னிங்ஸை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தோனியின் இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘களத்தின் தோனியின் போராட்டம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஏனெனில், வெற்றிபெறுவதற்கான சூழல் இல்லாமல், குறைந்தபட்ச வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும்போது, மனம் இயல்பாகவே எதிர்மறையாக யோசிக்கத் தொடங்கிவிடும். நமது சிறந்த ஷாட்களின் மூலம் விளாசப்படும் பந்துகள், ஃபீல்டரை நோக்கி சென்று டாட்களை அதிகப்படுத்தும்போது அழுத்தம் இன்னும் அதிகமாகிறது. அதே மைதானத்தில் நான் ஆடிய சொதப்பலான ஆட்டத்தை தோனியின் இன்னிங்ஸ் நினைவூட்டியது’ என தெரிவித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுத்தது. அடுத்தபடியாக பேட்டிங் செய்த இந்திய அணி 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அன்றைய போட்டியில் 174 பந்துகளைச் சந்தித்த கவாஸ்கர் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.