தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.
ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.
224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.