Skip to main content

பந்தை சேதப்படுத்திய விவகாரம்! - வார்னரும் அப்பீல் செய்ய மறுப்பு!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னரும் மேல்முறையீடு செய்ய மறுத்துள்ளார்.

 

warner

 

தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் பந்தை சேதப்படுத்திய குற்றத்தில், மூளையாக செயல்பட்டவர் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கேப்டன் ஸ்மித், இளம் வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோரின் மீது ஐசிசி போட்டித்தடை மற்றும் அபராதம் விதித்தது. 

 

மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக நடந்துகொண்ட ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடைவிதித்தது. இந்தத் தண்டனையில் சம்மந்தப்பட்ட வீரர்கள் மேல்முறையீடு செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஏற்கெனவே, ஸ்மித் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தங்கள் மீதான தண்டனையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், டேவிட் வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா நான் இழைத்த தவறுக்கு வழங்கியுள்ள தண்டனையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனது மோசமான நடவடிக்கைக்காக மன்னிப்பு கோருகிறேன். மேலும், ஒழுங்கான மனிதனாக, சக வீரனாக மற்றும் ரோல் மாடலாக நான் இருப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.