Skip to main content

"முதல் மேட்ச் ஆடுற மாதிரியே தெரியல" - இந்திய வீரரைப் புகழ்ந்த சச்சின்.

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

gill and siraj

 

இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு எதிரேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ரஹானே, பும்ரா, அஸ்வின் ஆகியோர் மட்டுமின்றி, அறிமுக வீரர்கள் சிராஜ் மற்றும் கில் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து ரஹானே, அஸ்வின் ஆகியோரை பாராட்டியுள்ள சச்சின், அறிமுக வீரர்கள் சிராஜ் மற்றும் கில்லையும் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ரஹானே அற்புதமாக பேட் செய்தார். அவர் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தார். அவர் ஆக்கிரோஷமான நோக்கத்தைக் கொண்டிருந்தார், ஆனால் அது அமைதி மற்றும் உறுதியால் சரியான அளவில் சமன்செய்யப்பட்டது. நமது அணி விளையாடிய விதம், ரஹானே அணியை வழிநடத்திய விதம் ஆகியவற்றை பார்க்கும்போது நமது அணியின் சிறப்பான ஆட்டம் இது என நினைக்கிறேன். சுப்மன் கில் நம்பிக்கையுடன் இருந்தார்" என கூறியுள்ளார். 

 

மேலும் சச்சின், "சிராஜ் எப்படி பந்து வீசினார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போலவே எனக்குத் தெரியவில்லை. அவர் தனது முதல் ஓவரை வீசிய விதத்தையும், பின்னர் அதை படிப்படியாக கட்டியெழுப்பிய விதத்தையும் பார்க்கும்போது, அவர் தனது முதல் போட்டியை விளையாடுவது போலவே தெரியவில்லை. திட்டங்கள் நன்றாக யோசிக்கப்பட்டிருந்தன. அதை அவர் சிறப்பாக செயல்படுத்தினார். இரண்டு அறிமுக ஆட்டக்காரர்களுமே திட்டங்களைச் செயல்படுத்துவதில் நன்றாக இருந்தனர்" என்றும்  பாராட்டியுள்ளார்.

 

Next Story

இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்த இந்தியா!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Ind vs eng score update india registers record victory

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து 192 ரன்கள் என்ற எளிதான இலக்கை இந்திய அணி துரத்தியது. இதில் கேப்டன் ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தார். 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் அரைசதம் கடந்தார். ரோஹித் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பட்டிதார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார்.

அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்பிராஸ்கான் கோல்டன் டக் ஆனார். பின்னர் வந்த ஜுரேல் முதல் இன்னிங்ஸைப் போல பொறுமையாக ஆடினார். கில், ஜுரேல் இணை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.  61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் 52 ரன்களும், ஜுரேல் 39 ரன்களும் எடுத்தனர்.

ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய ஜுரேல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு 33 ஆவது முறையாக 200க்கும் குறைவான இலக்கு கிடைத்து, அதில் 30 ஆவது முறையாக சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது. 3 முறை டிரா செய்துள்ளது. ஒரு முறை கூட தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 3-1 என வென்றுள்ளது. இந்த தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 2013இல் இருந்து தற்போது வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 சீரிஸ்களை வென்று  சாதனை படைத்து, இந்த சாதனையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.