உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 போட்டிகள் என்றால் இவர் இல்லாமல் நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவுதான். இவர் மைதானத்திற்குள் வந்தால்போதும் பந்து வீச்சாளர்கள் சற்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டி வைத்துள்ளார். ஆனால், தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விடைபெறுவதாக கூறி அனைவரையும் சோகப்பட வைத்துள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் “யுனிவர்ஸ் பாஸ்” என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தான்.
ஜமைக்காவில் உள்ள லூகாஸ் கிரிக்கெட் கிளப்பில் தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் கெயில். லூகாஸ் கிரிக்கெட் கிளப் இல்லாவிட்டால் எங்கு இருந்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை, ஒருவேளை வீதியில் இருந்திருப்பேன் என்று கெயில் அந்த கிளப் பற்றி கூறியுள்ளார். மேலும் அந்த கிளப் நர்சரியில் கெயில் பெயரை வைத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளனர்.
1999-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் கெயில். 2001-ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு சதம் அடித்தார். 2000-ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
2006-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டி-20 போட்டியில் அறிமுகமானார். முதல் உலகக்கோப்பை டி-20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனி ஒருவனாக நின்று யாரும் காணாத வகையில் முதல் உலகக்கோப்பை போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து டி-20 வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கெயில், உள்ளூர் டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் கெயில் மட்டுமே.
ஐ.பி.எல். போட்டிகளில் புனே அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் யாரும் காணாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டினார். புனே அணியின் பந்து வீச்சாளர்களை தனது பேட்டிங் மூலம் மிரட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து ஐ.பி.எல். வரலாற்றில் சரித்திரம் படைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த நான்காவது வீரர் அவர். டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று பார்மெட்டிலும் 20 சதம் அடித்த முதல் வீரர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதமும், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும், டி-20 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் கெயில். ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் விளையாடியபோது 30 பந்துகளில் சதம் அடித்து டி-20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஜமைக்கா மற்றும் யு.கே. ஆகிய இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் சமுதாயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள “கிறிஸ் கெயில் அகாடமி” என்ற அமைப்பை 2015-ஆம் ஆண்டு கெயில் நிறுவினார். தற்போது அந்த அகாடமி விரிவுபடுத்தப்பட்டு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி வருகிறது. தரமான வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாடும் வாய்ப்புகளை அளித்து வருகிறது.
உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர். மைதானங்களில் இவர் டான்ஸ் ஆடும் போது அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைப்பார். ஐ.பி.எல் போட்டிகளில் கோலி மற்றும் கெயில் செய்யும் சிறு சிறு குறும்புத்தனம் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
103 டெஸ்ட் போட்டிகளில் அதிக பட்சமாக 333 ரன்கள் உட்பட 7215 ரன்கள் எடுத்துள்ளார். 284 ஒருநாள் போட்டிகளில் அதிக பட்சமாக 215 ரன்கள் உட்பட 9727 ரன்கள் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் 369 டி-20 போட்டிகளில் 12298 ரன்கள், அதிகபட்சமாக 175 ரன்கள், 21 சதங்கள், 76 அரைசதங்கள், 905 சிக்ஸர்கள் என டி-20 போட்டிகளில் யாரும் தொட முடியாத இடத்தில் தனி ஜாம்பவானாக இருந்து வருகிறார்.
கெயில் 39 வயதில் ஒய்வை அறிவித்த பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்து தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். 6 மாதங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பி ஒரு சிறந்த கம்பேக் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.