Published on 03/09/2020 | Edited on 03/09/2020

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 -ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவானே நாட்களே உள்ளன.
கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே போட்டி நடைபெறுவதால் பி.சி.சி.ஐ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாகப் பின்பற்றி வருகிறது. இருந்தபோதிலும் சென்னை அணியைச் சேர்ந்த ஒரு பந்து வீச்சாளர், உதவியாளர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமீரகத்தில் உள்ள பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவினரில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் மற்றும் அவர் குறித்தான மற்ற விவரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.