2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்த மாத இறுதியில் மும்பையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் வெற்றிபெற்ற அணிக்கு ரூ.25 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடியும், அடுத்த இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 6.25 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு மொத்தமாக 50 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு, முதல் நான்கு இடங்களுக்கான மொத்த பரிசுத்தொகை 25 கோடி ரூபாயாக குறைக்கப்படுவதாக பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
அதன்படி, கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12.5 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6.25 கோடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.3 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ -யின் இந்த முடிவு ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக விரைவில் அணி உரிமையாளர்கள் பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.