இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன் என மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைக் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 55, தேவ்தத் படிக்கல் 54, ஆரோன் பின்ச் 52 ரன்கள் குவித்தனர். 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியும் 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்ததால், போட்டி சமநிலையில் முடிந்தது. மும்பை அணி தரப்பில் இஷான் கிஷான் 58 பந்துகளில் 99 ரன்களும், பொல்லார்ட் 24 பந்துகளில் 60 ரன்களும் குவித்தனர். பின் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு நடந்த சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
மும்பை அணி சார்பாக சூப்பர் ஓவரில் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷானை களமிறக்காதது ஏன் என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "இது சிறப்பான போட்டியாக அமைந்தது. எங்கள் அணிக்கு தொடக்கம் சரியாக கிடைக்கவில்லை. இஷான் கிஷான் ஆட்டம் அணியை சரிவில் இருந்து மீட்க உதவியது. பொல்லார்ட் ஆட்டம் வழக்கம் போல அற்புதமாக இருந்தது. அவர் களத்தில் நிற்கும் போது, முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இஷான் கிஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முழுவதும் களைப்படைந்து விட்டார். சூப்பர் ஓவரில் களமிறங்கும் நிலையில் அவர் இல்லை. ஹர்திக் பாண்டியா மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது" எனக் கூறினார்.