தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இப்பருவநிலைக்கு எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தைக் குளிர்வித்து வரும் நிலையில், மழைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வும் அவசியமாகிறது. குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு மழைக்காலங்களில் நிலவும் குளிர்ச்சியான சூழலினால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
குளிர்ச்சியான சூழலால் மூச்சுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுக் குழாய் சுருங்கி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காலை நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல், தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து, சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, மருத்துவர்களின் அறிவுரையை முறையாகப் பின்பற்றி வந்தால், பருவமழைக்கான நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.