Skip to main content

நீங்கள் நாள்தோறும் செய்யும் நடைபயிற்சி சரியா? - வழியெல்லாம் வாழ்வோம் #1

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
vazhiyellam vaalvom

 

வாழ்க்கை என்பதொரு பெரும் பயணம். அந்தப் பயணத்தை, பாதுகாப்பாயும்; தனக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளதாயும் அமைத்தல் என்பது நம் அனைவரின் விருப்பம். இந்தப் பயணமெனும் வழியெல்லாம் வலியில்லாத பெருவாழ்வு வாழ்தல் அனைவரின் உரிமை. அவ்வுரிமையைப் பெற சில கடமைகள் செய்ய வேண்டும். அத்தகு கடமைகளுள் ஒன்று உடற்பயிற்சி. அதிலும் குறிப்பாய் நடைப்பயிற்சி.

இன்று வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளோர் உடல் எடை அதிகம் உள்ளோர் உட்பட அனைவருக்கும் மருத்துவர்களால் நடைப்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் நடைப்பயிற்சியின் அடிப்படையை அறிந்து கொள்வோம். உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க, உடல் எடையைக் குறைக்க மற்றும் பிற உடல் உபாதைகளைக் குறைக்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர், குறைந்தது 45 நிமிடங்களுக்கு அதிகமாக நடந்தால் மட்டுமே முழுப்பயனை அடைய முடியும். முதல் 45 நிமிடம் வரை, நடைப்பயிற்சிக்கு முந்தைய வேளையில் நாம் எடுத்துக்கொண்ட உணவில் இருந்த குளுக்கோஸ் கரைவதற்கு மட்டுமே போதுமானதாக அமையும். 45 நிமிடங்களுக்குப் பிந்தைய நடையே, நமது இடுப்பு, தொடை, வயிறு, கை, கால்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.

ஆனால், அவ்வளவு நேரம் நடப்பதென்பது, பல நேரங்களில் நடைமுறையில் சாத்தியமில்லாக் காரியம். காரணம் நமது மூட்டுகளில் ஏற்படும் வலி.
 

walking


இந்த வலியோடு தொடர்ந்து நடப்பது, மூட்டுகளின் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சாதாரணமாக நடப்பதில் கூட சிக்கல் வரலாம். எனவே, நடைப்பயிற்சி மேற்கொள்வோர் அனைவரும் Resisted Exercise என்று சொல்லக்கூடிய எடை தூக்கும் பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தினால் மட்டுமே, நாம் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உகந்த சூழல் உருவாகும். அதற்காகவே இந்த எடை தூக்கும் பயிற்சி. வயது முதிர்ந்தோரும் கூடுமானவரை அவசியமாய் எடை தூக்கல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். தசையின் வலு என்பது மூட்டுகளை மட்டும் காப்பாற்றுவதற்கு அல்ல.

நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்படி எடுத்துச் செல்லப்பட்ட உணவு முறையாக பயன்படுத்தப்பட, இந்த நடைப்பயிற்சியும் எடை தூக்கும் பயிற்சியும் அதி முக்கியமாகும்.

எடுத்துக்காட்டாக, கால்சியம் சத்து; எலும்புகள், தசை, தசை நார்கள் என்று அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான ஒன்று. நாம் கால்சியம் நிறைந்த உணவை உட்கொண்டாலோ அல்லது கால்சிய மாத்திரைகளை உட்கொண்டாலோ அவை வயிற்றுக்குள் செல்கின்றன. அங்கிருந்து கால்சியசத்தை குடல் உட்கிரகித்து, தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அனுப்பவேண்டும். இந்தப் பரிமாற்றம் நிகழ நடைப்பயிற்சியும், சூரிய ஒளியும் அவசியமாகின்றன.

 

joint painஇதுபோலவே இன்னபிற சத்துக்களும் தேவையான உறுப்புகளைச் சரியாகச் சென்றடைய நடைப்பயிற்சி அவசியமாகிறது.

மேலும் உடல் எடையைக் கூட்ட மற்றும் உடல் நல்ல வடிவம் பெற என தசையை வலுவூட்டும் பயிற்சிகள் எல்லாம், இளையவர்களுக்கு மட்டுமானவை என்ற தவறான சிந்தனையை நம் பொதுப்புத்தியிலிருந்து நீக்கி; எடை சார்ந்த பயிற்சிகளை அனைவரையும் பின்பற்ற வைப்பது முக்கியம். தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளோடு கூடிய நடைப்பயிற்சியே முழுமையான பயன் தரும். தசையை வலுப்படுத்தும் பயிற்சியில்லாத நடைப்பயிற்சி, மூட்டு வலியில் நம்மை முடங்கச் செய்துவிடும். நம் உடலுக்கு ஏற்ற தசைவலு பயிற்சியின் அளவு, நடைப்பயிற்சியின் அளவு, பயிற்சிகளின் போது அணியப்பட வேண்டிய காலணிகளின் தன்மை ஆகியவற்றை அறிய அருகில் உள்ள இயன்முறை மருத்துவமனைகளை அணுகி இயன்முறை மருத்துவர்களின் முறையான ஆலோசனைகளை பெற்றுப் பயனடைய வேண்டும். "பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்" என்பது பழமொழி. "நடக்கத் தெரிந்தால் நன்மை கூடும்" என்பது புதுமொழி.


டாக்டர். சு. டேனியல் ராஜசுந்தரம்
தலைமை இயன்முறை மருத்துவர் 
மயோபதி ஆராய்ச்சி மையம்
ஜீவன் அறக்கட்டளை

Next Story

பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Physiotherapist doctors struggle in Trichy

பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு மத்திய - மாநில அரசுத் திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமாக ரூ. 35 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு இயன்முறை மருத்துவக் கல்லூரி பெயர்ப் பலகைகளில் இடம் பெற்றுள்ள சிகிச்சை என்ற வடமொழிச் சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் செயல்படும் பிசியோதெரபி கல்லூரிகளின் பெயர்ப் பலகைகளில் மருத்துவ இயன்முறை மருத்துவக் கல்லூரி எனத் தமிழில் அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவுறுத்தி ‘தி இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கம்’ சார்பில் திருச்சி ஜங்ஷனில் மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பூர்ணிமா, இணை செயலாளர் ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், டாக்டர்கள் ராஜ்குமார், பிரகாஷ், பாண்டுரங்கன், சரவணன், ஸ்ரீதர், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

கர்ப்பிணிப் பெண்ணின் வலி மிகுந்த பயணம்; நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
 Cuddalore Collector praised doctor who delivered  pregnant woman who was in convulsions

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருமுருகன் - ஷியமாளா தம்பதியர். திருமுருகன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷியமாளா 9 மாத கர்ப்பிணி. பிரசவம் பார்ப்பதற்குச் சென்னையிலிருந்து திருவாரூர் வழியாகத் தங்கள் சொந்த ஊருக்கு ரயிலில் கணவர் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த ரயில் விழுப்புரம் கடந்த போது நிறைமாத கர்ப்பிணி ஷியமாளாவுக்கு வலிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டுள்ளார். 

மனைவிக்கு ஏற்பட்ட நிலை கண்டு திருமுருகன் துடித்துப் போனார். உடனடியாக அங்கிருந்த பயணிகள் இது குறித்து ரயில் காப்பாளரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அருகில் மருத்துவமனை இருக்கும் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முடிவு செய்தனர். திருமுருகன் மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். கடலூரை நெருங்கிக் கொண்டிருந்தது ரயில், அதற்குள் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸை டிரைவர் பெஞ்சமின் பிராங்கிளின் தயாராக நிறுத்திவிட்டு சியாமளாவின் கணவர் திருமுருகனுக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில் காப்பாளர், கர்ப்பிணிப் பெண் சியாமளாவின் நிலைமையைக் கருதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தம் இல்லாதபோதிலும் ரயிலை நிறுத்தினார். ரயிலில் மயக்க நிலையில் இருந்த ஷியாமாளாவை பயணிகள் உதவியுடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து 108 ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்து ஏற்றினர். அதற்குள் முன்னேற்பாடாக கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி ஷியாமளாவின் உடனடி பிரசவத்திற்கு தயார் நிலையில் இருந்தார்.

ஷியாமளா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஷியமாளா வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தபோதும் அமினா கொடுத்து பிரசவம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குழந்தை இறந்து பிறந்தாலும் பரவாயில்லை என்று தாயையாவது காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நல்லபடியாக குழந்தையும் பிறந்தது. தாயும் நலமுடன் உள்ளார். இதனைத் தொடர்ந்து கணவர் திருமுருகன் மருத்துவக்குழுவுக்கும் ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இது குறித்து அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மருத்துவமனைக்கு விரைந்து, தாய் மற்றும் குழந்தை இருவரையும் பார்த்து நலம் விசாரித்தார். இக்கட்டான சூழ்நிலையில் திறம்படச் செயல்பட்டு இரு உயிரையும் காப்பாற்றிய மருத்துவர் மகேஸ்வரி அவரது குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் பாராட்டினார்.