Skip to main content

'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #3  

Published on 16/05/2018 | Edited on 21/05/2018
amma paiyan



புதிய சொற்களை அறிவது என்னும் நம் பயணத்தில் நாம் முதன்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. தமிழ் மொழியின் தனித்தன்மைகளில் தலையாயது என்று அதன் சொற்பொருள் தன்மையைக் கூறலாம்.

சொல் என்றால் அது பொருளைத் தருவது. அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கும். பொருள் தராதது சொல்லாகாது. அம்மா என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் இருக்கிறது. பெற்றெடுத்த தாயைக் குறிக்கிறது. பொருள் தராதவை வெற்றொலிக் குறிப்புகளாக நின்றுவிடும்.

 

 


சொல் எனப்படுவது ஏதேனும் ஒரு பொருளைக் கட்டாயம் குறிக்க வேண்டும். பொருள் தராதவற்றை நாம் சொல்லென்று கருதத் தேவையில்லை.

தமிழ் மொழியின் இந்தத் தன்மையை நம்மளவில் பொருத்திப் பார்ப்போம். சொற்களுக்குப் பொருள்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்தப் பொருள் நாமறிந்த ஒன்றாக இருக்கையில்தான் ஒரு சொல் நமக்குச் சொல்லாகிறது.

அம்மா என்பது நமக்குத் தெரிந்த பொருளையுடைய சொல். அதனால் அது நம் அறிவுப் பரப்பில் ஒரு சொல்லாகத் தெரிகிறது. சொல்லின் பொருள் தெரிந்ததால் அச்சொல்லை நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.

“அம்மம்” என்றும் ஒரு சொல் இருக்கிறது. அம்மம் என்ற சொல்லின் பொருள் நமக்குத் தெரிகிறதா? தெரியவில்லை. ஒரு சொல்லின் பொருள் நமக்குத் தெரியவில்லை என்றால் என்னாகும் ? அம்மா என்ற சொல் நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டிலும் இடம் பெற்றதைப்போல் அம்மம் என்ற சொல் இடம்பெறப் போவதில்லை. நாம் அறியாதிருந்ததனால் அம்மம் என்ற சொல்லுக்கு நம் வாழ்க்கையில் இடமில்லை.

நம்மை அடையாத சொல் நம்மை விட்டுப் போய்விடுகிறது. நமக்கு உடைமையான ஒன்று நம்மால் கைவிடப்படுகிறது. காலப்போக்கில் அதன் பயன்பாடு அருகிப்போய்க் கேட்பாரற்றுக் கிடக்கும். பார்க்காத பயிரெல்லாம் பாழ் என்று சொல்வார்கள். ஒரு சொல் பாழடைவதும் இப்படித்தான்.

 

 

amma teaches



அம்மம் என்ற சொல்லுக்கு ‘முலை’ என்று பொருள். ஒரு பொருளிலிருந்து தோன்றும் விளைபொருளுக்கும் அப்பொருளே பெயராகும். குழல் இனிது, யாழ் இனிது என்பது குழல், யாழ் ஆகிய பொருள்களிலிருந்து தோன்றும் இசையைக் குறிப்பது. அவ்வாறே குழந்தைக்கு ஊட்டப்படும் தாயின் முலைப்பாலும் அம்மம் எனப்படும்.

இப்போது எண்ணிப் பாருங்கள், அம்மம் என்ற சொல்லுக்கும் அம்மா என்ற சொல்லுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெற்றென விளங்கும். அம்மம் என்ற சொல் அம்மாவோடு தொடர்புடைய பொருளைத்தர வல்லது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் சொற்பொருள் அறிவதற்கான அடிப்படை.

ஒரு சொல்லின் ஏதேனும் ஒரு முன்னசையோ பின்னசையோ பகுதியோ விகுதியோ அந்தச் சொல்லுக்குரிய பொருளைப் பற்றிய குறிப்பைத் தரும். அதன்வழியே சென்று அப்பொருளை அடையலாம். ஞாலத்தின் எல்லா மொழிகளிலுமே சொற்களின் கட்டுமானங்கள் பெரும்பாலும் இவ்வகையில்தான் இருக்கும்.

 

 


அம்மான் என்பது தாயுடன் பிறந்தவர்களைக் குறிக்கும் ஆண்பால் சொல். தாய்மாமனைக் குறிப்பது. அம்மன் என்பது தாய் நிலையில் நின்று ஊர்காக்கும் பெண்கடவுளைக் குறிப்பது. அம்மணி என்பது தாய்க்குலத்திற்கான உயர்வுச் சிறப்பினை நல்கும் சொல். மேடம் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அம்மணி என்ற சொல்லைப் பரிந்துரைப்பேன். அம்மையார் என்பது மூத்த பெண்களைக் குறிக்கும் மரியாதையான சொல்தான். அம்மையப்பன் என்றால் தாயும் தந்தையும் சேர்ந்த வடிவத்தினன்.

ஒரேயொரு சொல் நமக்குத் தெரிந்ததாக இருந்தால் அது தொடர்புடைய பத்து இருபது சொற்களுக்கும் நமக்குப் பொருள் கிடைத்துவிடுகிறது. வேர்த்தன்மையுடைய ஒரு சொல்லை அறிந்திருந்தால் போதும். அதன் வழியொற்றித் தோன்றும் பற்பல சொற்களுக்குப் பொருள் கண்டுவிடலாம். அத்தகைய சொற்களை அறிந்துவிடலாம். அவற்றில் பெரும்பான்மையான சொற்கள் நமக்குத் தெரிந்தவையாகவே இருக்கும். சொல்லறிவைப் பெறுவதில் எவ்வகையான இடர்ப்பாடும் இராது. இதுதான் எளிய வழி.

இவ்வழியே சென்று நூற்றுக்கணக்கான சொற்களை அறியும் நுட்பத்தை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

 

தொடரின் அடுத்த பகுதி :

ஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #4 


தொடரின் முந்தைய பகுதி:​​​​​​​

தமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #2​​​​​​​