Skip to main content

மேகத்துக்கு 'ஷாக்' கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய திட்டம்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

cloud shock technology

 

இந்தியாவை பொறுத்தவரை, 100 மில்லி மீட்டர் மழை என்பது சாதாரணமான ஒன்று. சில சமயங்களில் இரண்டுமணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 100 மி.மீ மழை கொட்டித் தீர்த்துவிடும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையின் அளவே 100 மி.மீதான்.

 

ஐக்கிய அரபு அமீரகம், செயற்கையாக மழையை வரவைக்க, உப்பைத் தூவி மழையை வரவைக்கும் ‘கிளவுட் சீடிங்’ என்ற முறையை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதால், மழையின் அளவை அதிகப்படுத்த புதிய முறை ஒன்றைப் பரிசோதிக்க உள்ளது.

 

இம்முறையில், மேகங்களுக்குள் ட்ரோன் அனுப்பப்பட்டு, ஷாக் கொடுக்கப்படும். அப்போது மேகத்தில் உள்ள நீர்த்திவளைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிய நீர்த்திவளைகளாக மாறும். இதனால் நீர்த்திவளைகளின் எடை கூடி, மழையாக பூமியில் விழும் என இந்தத் திட்டம் குறித்து, இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் திட்டம் கூடிய விரைவில் பரிசோதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்களை பறக்கவிட்ட காவல்துறை; பட்டங்கள் மூலம் பதிலடி கொடுத்த விவசாயிகள்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Police Flying Drones Farmers reaction with kite

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு டிரோன்களை தடுத்து நிறுத்தினர். ஹரியானா காவல்துறையினர் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு பஞ்சாப் மாநில அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப் பகுதிக்குள் டிரோன்களை அனுப்ப வேண்டாம் என பாட்டியாலா காவல் துறை ஆணையர் சவுகத் அகமது அம்பாலா காவல்துறை துணை ஆணையருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் இன்று (15.02.2024) ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற உள்ளதா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நேற்று (14.02.2024) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. இருப்பினும் நேற்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.