கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிட்னி புறநகர் காட்டுப் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில், காட்டுத்தீயை அணைக்க போராடி வரும் 23 வயதான கர்ப்பிணி தீயணைப்பு வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து எரிந்துவரும் காட்டுத்தீயால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறிவரும் நிலையில், சுமார் 150 வீடுகளுக்கும் மேல் எரிந்து தரை மட்டமானதோடு, 3 பேர் இதில் சிக்கி பலியாகியுள்ளனர். கட்டுக்கடங்காமல் எரியும் இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
கேத் ராபின்சன் வில்லியம்ஸ் என்ற அந்த பெண், கர்ப்பினியாக இருப்பதால் தீயணைப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என உறவினர்கள், நண்பர்கள் வலியுறுத்திய நிலையிலும், காட்டுத்தீயை அணைக்க போராடி வருகிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள அவரது புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் தீயணைப்பு வீரர். ஆம் நான் கருவுற்றிருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். இந்த பணியை நிறுத்த போவதில்லை. என் உடல் என்னை நிறுத்த சொன்னால் மட்டுமே நான் நிறுத்துவேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.