Skip to main content

சீனப் பொறியாளர்களை பலிகொண்ட தாக்குதல்; பின்னணியில் இந்தியா இருக்கிறது! - பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

pakistan foreign minister

 

பாகிஸ்தான் நாட்டின் கோஹிஸ்தான் மாவட்டத்தில் தாசு பகுதியில் ஓடும் சிந்து நதியில், அந்த நாடும் சீனாவும் இணைந்து நீர் மின் திட்டம் ஒன்றுக்கான கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், அந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்குப் பொறியாளர்களை அழைத்துச் சென்ற பேருந்தின் மீது கடந்த மாதம் தாக்குதல் நடைபெற்றது.

 

இதில் ஒன்பது சீனப் பொறியாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து விசாரணை நடத்தின. இந்த விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பேருந்தின் மீது நடைபெற்றது தற்கொலை தாக்குதல் எனவும், தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், ஆப்கானிஸ்தானில் இந்த தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் மற்றும் இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் கூட்டு இருப்பதும் தெளிவாகத் தெரிவதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய இந்திய அதிகாரி ஒருவர், இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், கடந்தகாலங்களில் பாகிஸ்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கடந்த காலங்களில் வைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

 

அதேபோல் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அனுப்பிய செய்தியில், தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என மறுத்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்