அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் என்ற பகுதியில் வரலாறு காணாத காட்டுத்தீ பரவி நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹாலிவுட் நகரம் என்று சொல்லப்படும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டூத்தீ பரவியது. இந்த காட்டுத்தீயால், அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன.
தொடர்ந்து 3 நாட்களாக பரவி வரும் இந்த காட்டுத்தீயால், அந்த பகுதி முழுவதும் எரிமலை குழம்பு போல் காட்சியளிக்கிறது. பொது மக்களின் உடமைகள் மட்டுமல்லாது, லாஸ் ஏஞ்ஜல்ஸ் பகுதியில் வசிக்கும் பல ஹாலிவுட் நடிகர்கள் வீடு முதற்கொண்டு தீக்கிரையாகின. இதனால், அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டது. அதன்படி, கிட்டத்தட்ட, அப்பகுதியில் வசித்த 1.30 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. சுமார் 27,000 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தீயை அணைக்க, தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர், விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த பயங்கர தீ விபத்து அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.