நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறிப்பிட்ட இரண்டு நபர்களால் முடக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் தமிழக வெற்றிக் கழகத்தில் பலமாக எதிரொலிக்கும் நிலையில், விஜய்யின் அரசியலை இனி அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் முன்னெடுத்துச் செல்வார் என்றும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி, கட்சியின் கொள்கைகளை பிரகடனப் படுத்தினார் விஜய். ஆனால், அதன்பிறகு கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக் கைகளில் அவர் பெரிதாகக் கவனம் செலுத்துவ தில்லை என்றும், இதனால் அந்த பணிகள் மந்தமாக நடந்து வருவதாகவும், அதிலுள்ள பிரச்சனைகள், சிக்கல்களை விஜய்யிடம் சொல்ல வேண்டுமென முயற்சித்தால் அவரை சந்திக்கவிடாமல் தடுக்கப்படுகிறோம் என்கிற குமுறல்களும் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகிகள் பலரிடம் பேசியபோது,”"கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தும், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும்தான் விஜய்யை ஆக்ரமித்திருக்கிறார்கள். இருவரையும் கடந்து விஜய்யை யாரும் சந்தித்துவிட முடியாது. ஆரம்பத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள். தற்போது இருவரும் கைகோர்த்துக் கொண்டனர்.
கட்சியின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்த மாநில நிர்வாகிகள் நியமனம், மா.செ.க்கள் நியமனம், துணை அமைப்புகளான அணிகளின் செயலாளர் நியமனம், இவர்களுக்குக் கீழே பல்வேறு பொறுப்புகளுக்கு தகுதியானவர்களை நியமித்தல் உள்ளிட்ட பணிகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என புஸ்சி ஆனந்துக்கு உத்தரவிட்டிருந்தார் விஜய். அதற்கான பணிகளை முன்னெடுத்தார் ஆனந்த். அந்த பணிகளில் 50 சதவீதம் கூட முடிக்கப்படவில்லை. காரணம், புஸ்சி ஆனந்திற்கு கட்சியின் நிர்வாக நடைமுறை தெரியாததுதான்.
கடந்த மூன்று மாதத்தில் 100 மாவட்டங்களுக்கு மா.செ.க்கள் பட்டியலை தயாரித்திருந்தார். இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது. உதாரணமாக, நெல்லை மாவட்டத்துக்கு கேரளாவை சேர்ந்த சாஜி என்ற மலையாளியை தேர்வு செய்திருக்கிறார் புஸ்சி ஆனந்த். நெல்லையில் தி.மு.க., அ.தி.மு.கவில் அரசியல் ஜாம்பவான் கள் இருக்கிறார்கள். சமூகரீதியாக வலிமை பெற்றவர்கள் பொறுப்பில் இருக்கின்றனர். அப்படியிருக்கையில் அவர்களை சமாளிப்பதற்கேற்ப மா.செ. தேர்வு இருந்திருக்க வேண்டும். நெல்லை மாவட்ட அரசியல் எப்படி ஒரு மலையாளிக்குத் தெரியும்? தி.மு.க., அ.தி.மு.க. மா.செ.க்களை சமாளிக்க ஒரு மலையாளியால் முடியுமா? இப்படி நிறைய மாவட்டங்களில் சிக்கல்கள் இருக்கின்றன. தமிழகத்தின் கள நிலவரம் எதுவும் புஸ்சி ஆனந்துக்கு தெரியவில்லை.
இதனையெல்லாம் அறிந்த விஜய், புஸ்சியிடம் கடுமையாகக் கோபம் காட்டியதுடன், இன்னும் 1 வாரத்துக்குள் முழுமையான, நேர்மையான நியமனப்பட்டியல் என் பார்வைக்கு வரவேண்டும் என புஸ்சிக்கு கட்டளையிட, தற்போது பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் புஸ்சி ஆனந்த். இந்த ஆலோசனைக்கு விஜய் வருவதாக இருந்தது. புஸ்சி மீதுள்ள கோபத்தால் வரவில்லை.
இந்த நிலையில், விஜய்யை சந்தித்து கட்சியில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி சொல்லவேண்டும் என பொறுப்பாளர்கள் விரும்பினார்கள். ஆனால், விஜய்யை நேரடியாக தொடர்புகொள்ள எந்த வழியும் இல்லை. நேரடியாகத் தொடர்புகொள்ள விஜய்யும் விரும்புவதில்லை. இதனால், புஸ்சியின் மூலமாகத்தான் முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், விஜய்யை சந்திக்க நிர்வாகிகளை அனுமதிக்க மறுக்கிறார் புஸ்சி. இப்படி கட்சியினரை சந்திக்க விடாமல் தடுத்தால் எப்படி?
மாநில மாநாட்டிற்குப் பிறகு தொண்டர்களிடமிருந்து விலகிப் பதுங்கிக்கொண்டார் விஜய். அவரை சந்திக்கவே முடியவில்லை. கட்சியினரை சந்திக்காமல் அரசியல் எப்படி செய்வது? சினிமா நடிகராக இருக்கும்வரை…ரசிகர்களை சந்திக்க மறுத்தீர்கள். அரசியலுக்கு வந்தபிறகும் அதே மனநிலையில் இருந்தால் எப்படி?
இவரை நம்பி நாங்களும் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், எங்களை அவரும், அவரை நாங்களும் சந்திப்பது இயல்பாக இருக்க வேண்டாமா? தொண்டர்களுடன் டிஸ்டன்ஸை மெயிண்டெய்ன் பண்ணுவதாக இருந்தால் நேரடி அரசியலுக்கு எதற்கு வரவேண்டும்? நடிகராக ஒரு கூண்டுக்குள் முடங்கிக் கொண்டதுபோல் அரசியலிலும் இருந்தால் திமுகவினர் விஜய்யை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள். இதையெல்லாம் யோசித்து, விரைந்து ஒரு முடிவை விஜய் எடுப்பது நல்லது. இல்லையேல், சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அதிருப்திகள் வெடிக்கும். கட்சியை விட்டு பலரும் வெளியேறுவார் கள். அப்படி நடந்தால், தேர்தலை சந்திக்காமலே கட்சியை கலைக்கும் சூழலும் வரலாம்''’என்று ஆவேசப்படுகின்றனர்.
மேலும் நாம் விசாரித்தபோது, "தி.மு.க.விலிருந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.விலிருந்த பழ.கருப்பையா, காங்கிரசிலிருந்த ஜெயந்தி நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்த அர்ஜுன் ரெட்டி, நாம் தமிழர் கட்சியிலிருந்த காளியம்மாள் உள்ளிட்ட பலரும் விஜய் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார்கள். விஜய்யும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், புஸ்சி ஆனந்துக்கும் ஜானுக்கும் இதில் விருப்பமில்லை. அவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டால் பதவியும் பொறுப்பும் கொடுக்கப்பட வேண்டும்.
பொறுப்புகள் கொடுத்துவிட்டால் தங்களின் அதிகாரம் பறிபோகும் எனப் பயப்படுகின்ற புஸ்சியும், ஜானும், மாற்று கட்சியில் பிரபலமாக இருந்து ஒதுங்கியிருக்கும் அரசியல் வி.ஐ.பி.க்களை த.வெ.க.வில் இணைக்க தடையை ஏற்படுத்துகின்றனர். இந்த சூழ்ச்சிகள் விஜய்க்கு தெரியவில்லை. அரசியலுக்கு வந்துவிட்டால் தன்னைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விஜய் அறிந்துகொள்ளவேண்டும். அதனால் வீட்டுக்குள் இருந்துகொண்டு அரசியல் செய்ய திட்டமிடுவதை விட்டுவிட்டு பொதுவெளியில் அரசியல் செய்ய விஜய் முன்வந்தால்தான் தொண்டர்கள் உறுதியாக இருப்பார்கள்” என்று சுட்டிக்காட்டுகின்றனர் த.வெ.க. நிர்வாகிகள்.
இது குறித்து கருத்தறிய புஸ்சியையும், ஜானையும் தொடர்புகொண்டபோது, நமது லைனை அவர்கள் அட்டெண்ட் பண்ணவில்லை. இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, ”"வீட்டுக்குள்ளிருந்து விஜய் அரசியல் செய்கிறார் என்பது சுத்த பேத்தல். கடைசியாக நடிப்பதற்கு ஒரு படம் புக் பண்ணியிருக்கிறேன். அதை முடித்து விட்டதும் தீவிர அரசியலில் இறங்குவேன் என ஏற்கனவே சொல்லிவிட்டார் விஜய். அப்படியிருக்கையில் உங்களுக்கென்ன அவசரம்? சிலரின் விருப்பத்திற்காக விஜய் கட்சி நடத்தவில்லை. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக் கின்றன.
பிரதான கட்சிகளான தி.மு.க.விலும், அ.தி.மு.க. விலும் கட்சித் தலைமையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது தொடர்பான பணி களை கட்சித் தலைவர் களா தினந்தோறும் அலுவலகத்துக்கு வந்து கவனிக்கிறார்கள்? இல்லைதானே! அமைச் சர்களோ, பொறுப்பாளர் களோ, மா.செ.க்களோ தானே கவனிக்கிறார்கள். அது போலத் தான் விஜய்யும். அவர் எதற்கு தினமும் அலுவலகத்துக்கு வந்து பணிகளை கவனிக் கணும்? அதை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கவனித்து வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, வீதிக்கு வந்து அரசியல் செய்தாரா? தேர்தல் சமயத்தில் கூட பிரச்சாரக் கூட் டத்தில் கலந்துகொண்டாரே தவிர, பொது வெளியில் அவர் வந்ததில்லை. போயஸ் கார்டனிலிருந்தபடியே இயங்கினார். அவரைப் பார்த்து என்னைக்காவது, யாராவது, வீட்டிலிருந்தபடி அரசியல் செய்கிறார்னு சொன்னார்களா? இல்லையே! விஜய்க்கு மட்டும் ஏன் இந்த விமர்சனம்? ஏன்னா, விஜய் என்றால் பயம்.
மாற்றுக் கட்சியிலிருந்து பலரும் த.வெ.க.வுக்கு வரத் துடிக்கிறார்கள். உண்மைதான். ஆனால், வருபவர்கள் யாரும் பிரதான கட்சியில் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகி இங்கு வரவில்லை. அந்தந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வர்கள், ஓரங்கட்டப்பட்டவர் கள், மக்களிடமிருந்து அந்நியப் பட்டவர்கள்தானே வரு கின்றனர். அவர்களால் கட்சிக்கு 10 ஓட்டுகளைப் பெற்றுத் தர முடியுமா? முடியாது.
அப்படிப்பட்டவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வ தால் கட்சிக்கு என்ன பிரயோ ஜனம்? அவர்களுக்கு ஏன் ஒரு முகவரியை விஜய் தரவேண் டும்? அதனால்தான், அவர் களை விஜய் சந்திக்கவில்லை. நேரமும் தேவையும் வரும் போது பரிசீலிப்போம்; அதனால் விமர்சனங்கள் எழுந்தால் கவலை இல்லைன்னு இருக்கிறார் விஜய்''’என்று பதிலடி தருகின்றனர்.
இச்சூழலில், நீட் தேர்வு ரத்து தொடர்பான தி.மு.க. அரசுக்கு எதிரான விஜய்யின் அறிக்கை பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் "கடந்த 2021 தேர்தலின்போது "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்' என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்பவைத்தவர்கள்... தற்போது, "நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது' என்று தெரிவித்திருப்பது, ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார். எனினும், "ஆளுங்கட்சிக்கு எதிராக அறிக்கையாக இல்லாமல் நேரடியாகக் கேட்டிருந்தால் இன்னும் பரபரப்பாகியிருக்கும்' என த.வெ.க. நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், கட்சியில் புஸ்சி ஆனந்த் தவறு செய்து வருவதாக த.வெ.க. நிர்வாகி ஒருவருடன் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அந்த ஆடியோவில், விஜய்யின் முகம் மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி புஸ்சி ஆனந்த்தான் எல்லாத்தையும் நடத்துகிறார். 30 சதவீத வாக்குகள் வாங்குமளவுக்கு நான் உழைத்திருக்கிறேன். இப்படியே போனால் 2 சதவீத வாக்குகள் கூட வாங்கமுடியாது என்று எப்போதோ பேசிய ஆடியோ இப்போது பரபரப்பாகியிருக்கிறது. இந்த ஆடியோ, விஜய்யின் கவனத்துக்கு சென்ற நிலையில், புஸ்சியை அழைத்து, "நீங்கள் இப்படி நடந்துகொள்வீர் களென நான் எதிர்பார்க்கவில்லை. எனது நம்பிக்கையை உடைத்துவிட்டீர்கள்'' என்று கடினமான வார்த்தைகளுடன் கோபமாக பேசியிருக்கிறார் விஜய் என்கிறார்கள் த.வெ.க.வினர்.
இதுகுறித்து விசாரித்தபோது, "புஸ்சி பற்றி ஜான் பேசிய அனைத்தும் உண்மைதான். இல்லாததை, நடக்காததை அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதில் உண்மை இருந்ததால்தான் புஸ்சியிடம் கோபம் கொண்டிருக்கிறார் விஜய். புஸ்சி மீது கட்சியில் அதிருப்திகள் வெடித்தபடி இருக்கிறது. இது மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் 2 கோடி கேட்டு வருகிறார் புஸ்சி. சீட் கிடைத்தால் பணம் திருப்பித் தரப்படாது. சீட் கிடைக்கவில்லை யெனில், ஒன்னரைக் கோடி திருப்பித்தரப்படும். மீதியுள்ள 50 லட்சம் கட்சி நிதிக்காக எடுத்துக்கொள் ளப்படும் என பேரம் பேசி வருகிறார் புஸ்சி. இதையும் அறிந்ததால்தான் புஸ்சியிடம் ஏகத்துக்கும் கோபம் காட்டினார் விஜய்''’ என்கின்றனர்.
இதற்கிடையே, விஜய்யை சுற்றி ஒரு இரும்புத் திரை உருவாகியிருப்பதை அறிந்து விஜய்யிடம் பேசிய அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், "அரசியலுக்கு நீ வரும்போதே, உன்னைச் சுற்றியிருக்கும் புஸ்சி ஆனந்த் மாதிரி ஆட்களால்தான் உனக்கு சிக்கல் வரும்னு எச்சரிச்சேன். நீ கேட்கலை. இப்போ, அந்த நபரால்தான் உனது அரசியல் அஸ்தமனமாகப் போகிறது. ஏன்னா, அந்த நபரை உளவுத்துறை யினர் வளைத்து ரொம்ப நாளாச்சு'' என எச்சரிக்கை செய்திருக்கிறார்’என்கின்றனர் எஸ்.ஏ.சி.க்கு நெருக்கமானவர்கள்.