அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் அதிபராக கடந்த 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். அதே சமயம் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர், ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சி அளித்தார். மேலும், ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்படி, இந்த வழக்கின் பலகட்ட விசாரணைக்குப் பின், டொனால்ட் டிரம்பு குற்றவாளி எனக் கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் நடிகைக்குப் பணம் அளித்ததை மறைத்து முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப்பை நிபந்தனையின்றி நீதிமன்றம் விடுவித்துள்ளது. வரும் 20ஆம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.