Skip to main content

கோடிகளைக் கொட்டிய கரோனா... ஜெப் பெசோஸ் சொத்துமதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்வு !!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

jeff bezos

 

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்வது பெரும் சிரமமாக உள்ளது. பல நாடுகள் தொழில்முடக்கம் காரணமாக பெருமளவில் பொருளாதாரச்சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஃபோர்ப்ஸ் இதழில் அமேசான் நிறுவனரின் சொத்து மதிப்பு உயர்வு குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி தலைசுற்ற வைக்கிறது. 

 

அதில் இந்தாண்டின் தொடக்கத்தில் 115 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 204.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர் வரிசையில் சில ஆண்டுகளுக்கு யாரும் தொடமுடியாத இடத்திற்கு சென்றுள்ளார். இம்மதிப்பானது இரண்டாம் இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட 90 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகம். இந்தத் திடீர் ஏற்றத்திற்கு, கரோனா ஊரடங்கால் மக்கள் முழுமையாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் இணையவழி வர்த்தகம் அதிகரித்ததே காரணமாக சொல்லப்படுகிறது. அமேசான் நிறுவனத்தைத் தவிர்த்து வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல நிறுவனங்களிலும் ஜெப்பெசோஸ் முதலீடு செய்துள்ளார்.

 

கடந்த ஆண்டில் ஜெப் பெசோஸிற்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது. அதில் அவர் நஷ்ட ஈடாக அமேசான் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை மனைவிக்கு அளித்தார். இந்த விவாகரத்து நடந்திருக்காத பட்சத்தில் அவரது சொத்து மதிப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

 

ஜெப்பிடம் இருந்து 25 சதவிகித பங்குகளைப் பெற்ற அவரது மனைவி உலக பணக்காரர் பட்டியலில் 14 இடத்திலும், உலக பணக்காரப் பெண்கள் வரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.        

 

 

சார்ந்த செய்திகள்