லாரி மூலம் அமெரிக்க வெள்ளை மாளிகையைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், சந்தா நகரில் பிறந்த சாய் வர்ஷித் கந்துலா (20), அமெரிக்காவில் கீரின் கார்டு பெற்று அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நிரந்தர குடியிருப்பாளாராக வசித்து வந்தார். இவர் கடந்த மே 22, 2023ஆம் ஆண்டில் செயிண்ட் லூடிஸிலுருந்து வாஷிங்டன் டிசிக்கு வணிக விமானத்தில் சென்றுள்ளார். மாலை டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த கந்துலா, லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்து வாஷிங்டன் டிசிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அமெரிக்கா வெள்ளை மாளிகை மற்றும் அதிபர் பூங்காவை பாதுகாக்கும் தடுப்புகள் மீது கந்துலா மோதியுள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து லாரியை விட்டு கீழே இறங்கிய கந்துலா, தனது பையில் இருந்து நாஜி கொடியை வெளியே எடுத்து அசைத்து காட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா பூங்கா காவல்துறை மற்றும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கந்துலாவை கைது செய்து காவலில் எடுத்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதில், இந்த தாக்குதலை நடத்துவதற்கு பல தினங்களாக திட்டமிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர், அமெரிக்காவின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றச்சாட்டில், கந்துலா குற்றவாளி என்று கடந்தாண்டு அமெரிக்கா மாவட்ட நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தியா வம்சாவளியான கந்துலாவிற்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி டாப்னி எல் பிரீட்ரிக் உத்தரவிட்டுள்ளார்.