
கரூர் மாவட்டம், மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதிவேல்(33), அருண்குமார்(23) ஆகியோருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த பெரியசாமி, வினோத் மற்றும் ஆனந்தன். ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஜோதிவேல் மற்றும் அருண்குமார் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது பெரிய சாமி, வினோத் மற்றும் ஆனந்தன் ஆகியோர்களின் வாகனங்கள் சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த அருண்குமார் அதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அருண்குமாருக்கும் பெரியசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னும் இருவருக்கும் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெரியசாமி, நேரில் வந்து பார் என மிரட்டியுள்ளார். இதனால் நேரில் சந்திப்பதற்காக அருண்குமாரும் ஜோதிவேலும் சென்றுள்ளனர். அங்கு பெரியசாமி, வினோத் மற்றும் ஆனந்த் ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அரிவாளால் வெட்டி அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அருண்குமாருடன் சென்ற ஜோதிவேலையும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த லாலாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கொலை செய்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.