
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (25.03.2025) டெல்லி சென்றிருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த 2023இல் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. அப்போது, இனி எப்போதும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறினர். இருப்பினும் பாஜகவோடு அதிமுக கூட்டணி சேரும் என்று தகவல் பரவி வந்த வண்ணம் இருந்தது.
அதே சமயம் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை பொறுத்த வரைக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும். அது தான் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத திமுக ஆட்சியைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பா.ஜ.க. உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாடு பிரச்சினை என்றால் சந்திக்க அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள். அப்படி வழங்கினாலும் கோரிக்கை மனுவை பெற்று 3 நிமிடத்தில் அனுப்பியிருப்பார்கள். அரசியல் உறவே கிடையாது எனச் சத்தியம் பேசிய எடப்பாடி பழனிசாமி, என்ன நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சந்தித்துப் பேசினார் எனத் தெரியவில்லை. என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்” என்றார்.