
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடிநாள் வெள்ளி விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்ததோடு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அதிமுக-தேமுதிக கூட்டணி அமைந்த போதே கையெழுத்திடப்பட்டு தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு வேண்டும் என உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா சீட்டு தேர்வுக்கான அந்த நாள் வரும் பொழுது தேமுதிகவின் சார்பில் யார் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்கு செல்ல இருக்கிறார் என்பதை அந்த நேரத்தில் தேமுதிக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் '2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா இல்லையா ன்பதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருட கட்சி இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது. அதனால் இந்த கேள்விகள் எல்லாம் விஜய் இடம் கேளுங்கள். ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் நான் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால் எங்களுடைய திட்டங்கள் எல்லாமே கொள்கை ரீதியாக சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. விஜய் அவருடைய அரசியலில் எடுபடுவாரா எடுபடமாட்டாரா என்பதை நான் யூகமாக, ஜோசியமாகவோ சொல்ல முடியாது. அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள், அடுத்த கட்ட செயல்பாடுகளை பொறுத்துதான் அது இருக்கும்'' என்றார்.
படம்: எஸ்.பி.சுந்தர்