
நடப்பு ஐ.பி.எஸ் சீசனின் 17வது போட்டி சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று(5.4.2025) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேடிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 183 ரன்களை குவித்தது. எனவே 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதிய சென்னை அணி தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து இரு போட்டிகளில், அதுவும் சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிலர் மூத்த வீரராக இருக்கும் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். அதேசமயம் அனுபவ வீரரான தோனி அணியில் இருப்பது சென்னை அணிக்கு தான் கூடுதல் பலம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியை கான தோனியின் தாய் - தந்தை, சகோதரி, மனைவி மற்றும் மகள் என ஒட்டுமொத்த குடும்பமே மைதானத்திற்கு வந்திருந்தது. அதன் காரணமாக தோனியின் கடைசி போட்டி இதுதான் என்று சில வதந்திகள் பரவியது. போட்டி முடிந்ததும் பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங், “தவறான தகவல் பரவி வருகிறது. தோனி ஓய்வு பெறவில்லை” என்றார்.
இந்த நிலையில் கூடைப்பந்து போட்டில் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் தற்போது ஓய்வு பெறவில்லை. நான் ஐ.பி.எல் விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல் சீசன் முடிந்து ஜூலை மாதம் வந்தால் எனக்கு 44 வயதாகிவிடும்; ஆகவே அடுத்த ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதா வேண்டாமா என முடிவு செய்ய எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன” என்று ஓய்வு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.