
கோவையை சேர்ந்த பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்ஸோ வழக்கு பாய்ந்துள்ள நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்துவ மதபோதகரான இவர் பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார். குறிப்பாக கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமாகி இருந்தார். ஜெபராஜ், எட்வின் ரூஸோ என்பருடன் இணைந்து கோவை கிராஸ்கட் சாலையில் 'கிங் ஜெனரேஷன்' என்ற பிரார்த்தனை கூடத்தை நடத்தி வந்தார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இதனால் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் சிறுமிகளை முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. எதிர் தரப்பு அந்த வீடியோவை வெளியிட்டதாக நினைத்த ஜான் ஜெபராஜ் விளக்கமளித்து பல்வேறு ஆடியோக்களையும் ஜான் ஜெபராஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில் 'புரிந்துகொள் நமக்கு இரண்டு பேருக்கும் இடையே மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அதை வைத்து எவனோ ஒருத்தன் கேம் விளையாடி அசிங்கத்தை உண்டு பண்ணி, உன்னையும் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறான். என்னையும் துரத்தி துரத்தி சாவுக்கு நேராக ஓட வைத்திருக்கிறான். கர்த்தர் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சனை நடக்கும் பொழுது எந்த ஒரு மனுஷனும் முதலில் தோன்றுவது செத்துப் போயிடலாம் என்று. எனக்கு கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறை தற்கொலை செய்கின்ற எண்ணம் வந்தது. சாப்பிடவில்லை. ஒன்பது கிலோ கம்மியாகி விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஆண்டவன் பிரசங்கத்தில் உட்கார்ந்து ஜெபம் செய்தேன். இவ்வளவு தப்பை செய்துவிட்டு இப்படி பண்றான் என நினைப்பாய். நம்ம ரெண்டு பேருக்கு தான் தெரியும் என்னென்ன தவறு நடந்தது என. என்னவா இருந்தாலும் கர்த்தர் என்னை பார்த்துக் கொள்வார். மறுபடியும் சொல்கிறேன் உன்னை நான் பொது இடத்தில் அசிங்கப்படுத்த மாட்டேன்' என அந்த ஆடியோ உள்ளது.
இந்நிலையில் ஜான் ஜெபராஜ் மீது இரண்டு போக்ஸோ வழக்கு பாய்ந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின் பொழுது அதில் கலந்துகொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை அவர் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.