பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி விஜய் ரசிகையான சிறுமி ஒருவர் நடிகர் விஜய்யிடம் உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “விஜய் அண்ணா, நான் உங்கள் தீவிர ரசிகை. எனக்கு அப்பா, அம்மா இல்லை. நான் ஏழை தலித் சிறுமி. எனக்கு நடந்த கொடுமைக்கு நான் வாழக்கூடாது எனச் சாகப்போனேன். ஆனால், சில நல்லவர்கள் என்னைக் காப்பாற்றிவிட்டார்கள். நீங்கள் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் அண்ணா” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “விஜய் அவர்களே, உங்களிடம் எத்தனை விலை உயர்ந்த கார், நகைகள் சொத்துகள் உள்ளது. அது எல்லாம் உங்கள் பரம்பரை சொத்தா? சாதாரணக் கூலி வேலை செய்பவர்கள், தமிழ் இளைஞர்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து, அப்படிச் சேர்த்து வைத்த சொத்து தானே. உங்களது வசனங்கள் எல்லாம் சினிமாவுக்கு மட்டும் தானா? அவள் 17 வயது பெண் சிறுமி. 60% உடல் எரிந்த நிலையில் உடல் ரணத்தில் உங்களிடம் கோரிக்கை முன்வைக்கிறார். கோரிக்கை முன்வைத்து இந்த நிமிடம் வரை நீங்கள் உதவி செய்யவில்லை.
உங்களுக்கு தை 1 ஆம் தேதி வரை தமிழர் முன்னேற்றப் படை அவகாசம் தருகிறது. அந்த தை 1-க்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு இல்லையென்றால், சென்னையில் எந்தெந்த திரையரங்கில் வாரிசு திரைப்படம் திரையிடப்படுகிறதோ, அங்கெல்லாம் உங்களது உருவபொம்மையை தமிழக முன்னேற்றப் படை எரிக்கும். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பும் உங்களது உருவபொம்மை எரிக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சந்தித்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, வேறெந்த உதவி வேண்டுமானாலும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தான் நிர்வாகிகள் வந்ததாக அவர்கள் சிறுமியிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.