Skip to main content

ஆளுநருக்கு எதிர்ப்பு; அரசுக்கு வலியுறுத்தல் - விஜய்

Published on 06/01/2025 | Edited on 06/01/2025
tvk leader vijay about governor rn ravi walk out in assembly

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று(06.01.2025) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். 

சட்டப்பேரவைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார். அவர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், “'அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது”  குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில பரபரப்பை ஏற்படுத்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் எக்ஸ் பக்கத்தில் ஆளுநர் வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்