தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக சற்று அதிகரித்து பதிவாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 600-ஐ நெருங்கி பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 589 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 596 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,694 இருந்து 3,073 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 153 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 295 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 289 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-122 பேருக்கும், கோவை 31, திருவள்ளூர் 27, காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் தலா 21 என கரோனா பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் 50 முதல் 100 படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்க வேண்டும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிங்க், பாராசிட்டமால், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.