Skip to main content

‘பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்’ - வெளியான முழு விவரம்!

Published on 06/01/2025 | Edited on 06/01/2025

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (06.01.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள், தனி அலுவலர், போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 10/01/2025 முதல் 13/01/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக 15/01/2025 முதல் 19/01/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு எதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number)  044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள எதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்