2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (06-01-25) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் ‘யார் அந்த சார்?’ என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை தந்தனர்.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறியது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரின் 2வது நாள் அலுவல் இன்று (07-01-25) தொடங்கியது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்றும் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் மறைந்த மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். அதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.