புதுக்கோட்டை கலைஞர் அரசு கலைக் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை சார்பில் நடந்த வரலாற்றுப் பேரவை கூட்டம் கல்லூரி முதல்வர் ஞான ஜோதி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் காயத்ரி தேவி செய்திருந்தார். சிறப்பு விருந்தினராகப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல் அறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் எச்சங்கள் என்ற தலைப்பில் பேசினார்.
அதன்படி அவர் பேசுகையில், “வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய குருவிக் கொண்டான் பட்டி கற்கோடாரி, மலையடிப்பட்டி பாறை கிண்ணங்கள், அறந்தாங்கி அருகே அம்பலத்திடலில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்கால கற்கோடாரி, திருமயம் பாறை ஓவியங்கள், திருமயம் அருகே கண்ணனூர் நெடுங்கல், மலையடிப்பட்டி பெருங்கற்கால சின்னங்கள், சித்தன்னவாசல் தமிழிக் கல்வெட்டுகள், குன்றண்டார் கோவில் குடைவரைக்கோவில், கவிநாட்டு கண்மாய் கோமாறன் சடையன் கல்வெட்டு, நார்த்தாமலை முற்கால சோழர்கால முத்தரையர் கற்றளி தொடங்கி தொண்டைமான்கள் காலத்தைய சத்திரங்கள் நீர் நிலைகள் பற்றிய தகவல் அடங்கிய கல்வெட்டுகள் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அனைத்து விதமான தொல்லியல் சான்றுகளும் நிரம்பக் கிடைக்கின்றன.
புதுக்கோட்டையைத் தவிர்த்து ஒரு தொல்லியல் ஆய்வாளர் வரலாற்றுக் கட்டுரையை முழுமை பெறச் செய்திட முடியாது என்கிற அளவிற்கு அபரிமிதமாக தொல்லியல் சான்றுகளைப் புதுக்கோட்டை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றைப் போற்றி பாதுகாக்க வேண்டியது புதுக்கோட்டை மக்களாகிய நமது கடமை, வரலாற்றுத் துறை மாணவர்களாகிய நீங்கள் தான் இவற்றைப் போற்றி பாதுகாப்பதிலும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும். வரலாற்றுச் சின்னங்களில் காதலர்களின் பெயர்களை எழுதி வைப்பதும், படங்களை வரைவதும், கல்வெட்டுகளில் வண்ணம் பூசுவதும், ஊர் ஒதுக்குப்புறங்களில் வயல்வெளிகளில் இருக்கும் கல்வெட்டுகளின் முக்கியத்துவம் அறியாது அவற்றைச் சிதைப்பதும் மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும்.
அரசு மட்டுமே இவற்றைப் பாதுகாக்கும் என்று நாம் வேடிக்கை பார்ப்பது இந்தியக் குடிமகனாக நமது கடமையைச் செய்யத் தவறிவிட்டோம் என்பதாக அமைந்து விடும். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உறுதி ஏற்போம்” என்று பேசினார். இந்நிகழ்வில் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர்கள் நீலாவதி, மாலதி, முத்து உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியாக முதுகலை வரலாற்று மாணவி ரமீலா ஶ்ரீ நன்றி கூறினார்.