Skip to main content

'முதல்வரின் இரண்டு அறிவிப்புகள்'- மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஓபிஎஸ்

Published on 03/04/2025 | Edited on 03/04/2025
Two announcements by the Chief Minister - OPS welcomed with joy

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று நள்ளிரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக முதல்வர் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்தபடி சட்டப்பேரவைக்கு வருகை தந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் 'திரும்ப பெறு திரும்பப் பெறு சட்ட திருத்தத்தை திரும்பப் பெறு...' என முதல்வர் கோஷம் எழுப்ப, திமுக உறுப்பினர்களும்  சட்டப்பேரவையில் கோஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரையில், ''இரண்டு முக்கியமான அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவது அறிவிப்பு உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களை பெருமைப்படுத்திட, போற்றிட தமிழக அரசு விரும்புகிறது. 'உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என தொழிலாளர்கள் அனைவருக்குமான முழக்கத்தை வடித்து தந்தவர் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ். இழப்பதற்கென்று எதுவும் இல்லை பெறுவதற்கு பொன்னுலகம் இருக்கிறது என நம்பிக்கை விதைகளை விதைத்த சிந்தனையாளர். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்று தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள் சிலர்தான். அந்த சிலரில் தலைமகனாக போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ். அப்படிப்பட்டவரின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுகிறேன்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப் புலி என போற்றப்படுகின்ற பி.கே.மூக்கையா தேவருக்கு நாளை 103 வது பிறந்தநாள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி பிறந்த அவர், இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நம்பிக்கையை பெற்று அவருடைய கட்சியில் இணைந்தார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு 1957,67, 71, 77 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியவர். 1967 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பொழுது அண்ணாவிற்கு தோள் கொடுத்தவர். தற்காலிக பேரவை தலைவராக இருந்தவர். அவர்தான் தேவர் சமுதாய மக்களுக்கு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தவர். அவரை சிறப்பிக்கும் வகையில் உசிலம்பட்டி பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

முதல்வரின் இந்த அறிவிப்புகளை வரவேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், ''மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை வரவேற்கிறேன்.  முத்துராமலிங்க தேவருக்கு உடன் பிறந்த சகோதரராக ஆதரவாக இருந்தவர் மூக்கையா தேவர். அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என முதலமைச்சரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

சார்ந்த செய்திகள்