பெட்ரோல் திருட சென்ற இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்ற ஆத்திரத்தில் இருசக்கர வாகனங்களை எரித்த சம்பவம் நாகர்கோவிலில் நிகழ்ந்துள்ளது. நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஹரிஹரசுதன் வீட்டின் முன்புறம் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்க்கையில் அவரது இருசக்கர வாகனம் எரிந்த நிலையில் கிடந்தது.
மர்மமான முறையில் தனது இருசக்கர வாகனம் எரிந்தது தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் ஹரிஹரசுதன் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அதேபகுதியைச் சேர்ந்த ராம்கி, தாணுமூர்த்தி ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஹரிஹரசுதனுக்கும் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் எந்தவித முன் விரோதமும் இல்லாத நிலையில் பைக்கை எரித்தது ஏன் என்பது குறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதால் ஹரிஹரசுதனின் வாகனத்திலிருந்து பெட்ரோலை திருடும் முயன்றதாகவும், அப்பொழுது அந்த பைக்கிலும் பெட்ரோல் இல்லாததால் விரக்தி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ஆத்திரமடைந்து வண்டிக்கு தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.