
மதிமுக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் 'தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இருக்கிறது. பெயர் பலகைகளில் முதலில் தமிழில் பெயர் இருக்க வேண்டும். அதன் பிறகு ஆங்கிலம். அதற்கு கீழ் சிறியதாக மற்ற மொழிகள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீரங்கம் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையம் அதிலிருந்து விதிவிலக்கானதா? காரணம் முதல் இடத்தில் பெரிய அளவில் இந்தி இருக்கிறது' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த துரை வைகோ, ''கோட்ட மேலாளரிடம் தொடர்பாக ரிக்வெஸ்ட் வைத்திருக்கிறேன். எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கிற பொழுது இங்குள்ள முக்காவாசி பேருக்கு 90 முதல் 95 சதவிகிதம் இருக்கும் இந்தி தெரியாது. தமிழில் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். இந்த ரயில்வே ஸ்டேஷனை பொறுத்தவரை மாநில அரசினுடைய சட்டங்கள் இருக்கிறது. குறிப்பாக மொழி சார்ந்த சட்டங்கள் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக அந்த கோரிக்கையை வைப்பேன். இது விதிவிலக்கு கிடையாது. ஸ்ரீரங்கம் தமிழகத்திற்கு உட்பட்ட பகுதி. தமிழ் மாநிலத்தில் என்னென்ன சட்டங்கள் இருக்கிறதோ குறிப்பாக மொழி சார்ந்த சட்டங்கள் என்னென்ன இருக்கிறதோ அதை இங்கேயும் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கொண்டு வருவேன்'' என்றார்.