
சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. முதலில் தெலுங்கு இயக்குநர்கள், நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கில் இருந்து தமிழ்நாடு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி, பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்ததாக நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தற்போது பாலியல் புகார் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி அளித்த பேட்டியில்,
சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சினிமாத் துறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம்.
சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை. எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும் என்றார்.