


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இக்கிராமத்தில் இருந்த மதுபானக்கடையின் முன்பு மது போதையில் இளைஞர்களிடையே பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் அக்கிராமத்தில் இரு தரப்பு மக்களுக்கு இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டதால் மதுபானக்கடை மூடப்பட்டது.
இந்நிலையில் அதே கிராமத்தில் புதிதாக மீண்டும் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலம் - தேவங்குடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான கடையால் முன்னதாக உயிரிழப்பு நடந்துள்ளதாகவும், அதனால் இக்கிராமத்தில் மதுபான கடை இருக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் மதுபான கடை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று உத்தரவு அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபான கடையையும் இழுத்து மூடப்பட்டது. இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.