
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், சில நாட்களாக அதிக அளவில் கொரோனா பரவி கடந்த 1 வாரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போது இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகினது. இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டை பொறுத்தவரை சந்தேகத்திற்கு இடமான நோயாளிகள் மற்றும் சில அறிகுறிகள் இருக்கக்கூடிய நோயாளிகள் தினந்தோறும் 10 பேருக்கு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது அந்த அடிப்படையில் வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதனால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பரவி வருகிறது’ எனத் தெரிவித்தது.

இந்த நிலையில், கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு தேவையற்ற பயம் வேண்டாம். மற்ற ஆயிரக்கணக்கான வைரஸ்கள் போன்று தான் இந்த கொரோனாவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், கொரோனா முழுமையாக அழிக்கப்படவில்லை, அதற்கான அவசியமும் இல்லை என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால், லட்சக்கணக்கான வைரஸ்கள் போன்று கொரோனா தொற்றும் அவ்வப்போது வரும், கட்டுப்படுத்தப்படும் அது தொடர்ச்சியாக சமநிலை நிலையில் தான் இருக்கும். இந்த கொரோனா தொற்று ஏற்படும் போது, யார் பாதிக்கப்படுகிறார்கள்?, எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது? எந்த அளவுக்கு வீரியமாக இருக்கிறது?, இதனால் மரணங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்தெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை முன்னிட்டே நாம் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.