
அண்மையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் மீண்டும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த நிலையில் அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் 26 வயதான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர், மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மாணவி மீது பாலியல் துன்புறுத்தல், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், படிக்கும் கல்லூரிக்குள் வைத்தே மாணவிக்கு சம்பந்தப்பட்ட மாணவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனிடையே தலைமறைவாக உள்ள மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவருவது அரசின் மீதான விமர்சனங்களுக்கு வழி வகுப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.