
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் முதல் பதவி வகித்து வந்தார். அதே சமயம் ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் என்பவர் மூலம் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி உரியப் பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதற்குச் செந்தில் பாலாஜி தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 23ஆம் தேதி (23.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதைச் செந்தில் பாலாஜி தரப்பு திங்கட்கிழமைக்குள் (28.04.2025) தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த பரபரப்பான சூழலில் தான் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எனவே அவர் வகித்த வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (28.04.2025) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, செந்தில் பாலாஜியின் நிலைப்பாட்டை விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் ரத்து செய்யப்படுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.