Skip to main content

அறிவியல்பூர்வமான நேர்மையான விசாரணையாம்! -நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
n

 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்குப் பதிலாக, பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என,  சென்னை உயர் நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருந்தார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன். 


இது தொடர்பாக, தற்போது இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. லாவண்யா அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், நிர்மலாதேவி, முருகன், கருப்பாசாமி ஆகிய மூவரையும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தோம். ஒப்புதல் வாக்குமூலமும் பெற்றிருக்கிறோம்.

 

சம்பந்தப்பட்ட மாணவிகளின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மொபைல்களில் பதிவு செய்யப்பட்ட நிர்மலாதேவியின் பேச்சுக்களை சி.டி.க்களாக மாற்றி, 160 சாட்சிகளை விசாரித்து, வாக்குமூலங்கள் பதிவு செய்திருக்கிறோம். மேலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சித்தது உண்மைதான் என்றும், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருக்காகவே மாணவிகளிடம் செல்போனில் பேசியதாகவும், நிர்மலாதேவி  ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இம்மூவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, மெமரி கார்டு, சிம் கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம். தடயவியல் துறை ஆய்வுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். நிர்மலாதேவியின் குரல் மாதிரி சென்னை, தடயவியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கை நடத்திட சிறப்பு வழக்கறிஞர் ராமகிருஷ்ணனை நியமித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் புலன் விசாரணை நடத்துவதில் முதன்மை அமைப்பான சிபிசிஐடி, அறிவியல்பூர்வமாக, நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 
தலைமை நீதிபதி அமர்வானது, பெண்கள் உரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதால், இவ்வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது  நீதியரசர் ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு. 


நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூவர் மட்டுமே குற்றவாளிகள் என்கிற ரீதியிலேயே,  சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கைக் கொண்டு செல்கின்றனர்.  மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.  


 

சார்ந்த செய்திகள்