Skip to main content

மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை; அரியலூரில் பகீர்!

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

 father who incident his daughter and then lost their life

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவி(50) - செல்வி(45) தம்பதியினர். இவர்களுக்கு 19 வயதில் ரஞ்சனி என்ற மகளும், 17 வயதில் சந்தியா என்ற மகளும் உள்ளனர். மூத்த மகள் ரஞ்சனி பி.எஸ்.சி நர்சிங் படித்து வந்தார்.  இளையமகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக 600க்கு 520 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ரவி அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். அதன் காரணமாக மூத்தமகள் ரஞ்சனியும், தாய் செல்வியும் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் வேலைகளை கவனித்து வந்தனர். அதேசமயம் இளையமகள் சந்தியா வீட்டில் இருந்து அவர்களுக்கு தேவையான உணவினை சமைத்துக் கொடுத்திருக்கிறார். சந்தியா, தாய் மற்றும் அக்காவிற்குச் சமைத்த உணவினை தினந்தோறும் தந்தை ரவியிடம் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் நேற்று மதியம் வழக்கம் போல் உணவு எடுத்துவரும் ரவி வெகு நேரமாகியும் உணவு கொண்டுவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த செல்வியும் ரஞ்சனியும்  வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இளைய மகள் சந்தியாவின் கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொலைசெய்யப்பட்டிருந்தார், மறுபுறம் தந்தை ரவி தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த இருவரும் அலறித் துடித்துள்ளனர். இந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரவி தனது மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் எந்த பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் சண்டை வந்தது என்பது குறித்தும் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்